பிரிகேடியர் பிரியங்க தொடர்பில் வெளியானது எதிர்பாராத தீர்ப்பு!

0

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான கைது உத்தரவை, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட, சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பொது ஒழுங்குகளை சட்டத்தை மீறி குற்றமிழைத்துள்ளார் எனக் கண்டறிந்த, வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம், அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து. கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு அரசாங்கத்தின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், இராஜதந்திர விலக்குரிமை பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு இருப்பது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, நேற்று பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்த போது, விசாரணை ஏதுமின்றி, பிடியாணையை திரும்பப் பெற நீதிவான் கட்டளையிட்டார்.

பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின் தலையீட்டை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்றைய விசாரணையின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ சார்பில் முதல் முறையாக சட்டவாளர் ஒருவர் முன்னிலையாகியிருந்தார்.

இந்த வழக்கை மார்ச் 1ஆம் நாளுக்கு நீதிவான் ஒத்திவைத்துள்ளார்.

அதேவேளை, இந்த வழக்கில் ஒரு தரப்பான பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் முன்னிலையாகவில்லை என்றும், சம்பவம் நடந்தபோது, பிரிகேடியர் பிரியங்கவின் இராஜதந்திர நிலை பற்றி நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு விளக்கமளிக்கும் வகையிலான ஆவணங்களை தாம் சமர்ப்பித்திருப்பதாகவும், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நீக்கக் கூடாது என வலியுறுத்தி, வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்துக்கு வெளியே புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் ஒன்றையும் நேற்று நடத்தியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.