மார்ச் 5 இல் இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிப்பு!

0

எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு பாராளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது.

சபாநாயகர் அறிவிப்பை விடுத்த அவர் மேலும் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மார்ச் முதலாம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் தீவிர சோதனை முன்னெடுக்கப்படும். இதன்போது அமைச்சர்கள், எம்.பி.க்களின் அறைகள், அலுமாரிகள் சோதனைக்குட்படுத்தப்பட இருப்பதால் தேவையான ஒத்துழைப்பை அனைவரும் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் மார்ச் 5 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு பொதுமக்கள் வருகை தர அனுமதி வழங்கப்படாது.

பாராளுமன்ற பார்வையாளர் கலரி அன்றைய தினம் விசேட அழைப்பாளர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கும்.

அத்துடன் அன்று எம்.பி.க்களுடன் வரும் விருந்தினர்கள் பாராளுமன்ற சுற்றுவட்டப்பகுதியான ஜயந்திபுரவிலிருந்து தனி வாகனத்திலேயே அழைத்து வரப்படுவார்கள்.

எம்.பிக்களின் வாகனங்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே இரு நாட்கள் நடைபெறும் இந்த பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கு அனைத்து எம்.பி.க்களும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கோருகின்றேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.