மீண்டும் முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்களின் அட்டகாசம் ஆரம்பம்!

0

தென்னிலங்கை பிரதேச மீனவர்கள் முல்லைத்தீவு பிரதேசத்தில் மீன்பிடிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள பணிப்பாளரிடமிருந்து, மாவட்ட நீரியல்வள திணைக்கள பிரதிப் பணிப்பாளரிற்கு அறிவித்தல் கடிதம் நேற்று (21) காலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிக்க 20 படகுகளிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவின் சாலையில் அவர்கள் நேற்றில் இருந்து தொழிலை ஆரம்பித்துள்ளனர்.

இந்த அனுமதியை பெற்ற 20 படகுகளும் சுரங்க என்ற ஒரு உரிமையாளரிற்கே சொந்தமானவை.

முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்திடம் மீனவ அமைப்புக்கள் முறையிட்டதையடுத்து, நேற்று மாலை சம்மேளனத்தின் அதிகாரிகள் சம்பவ சாலைக்கு சென்று நேரில் அவதானித்தனர்.

இதன்போது, சிங்கள மீனவர் படகுகள் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டது அவதானிக்கப்பட்டது.

எனினும் இது கொழும்பிலிருந்து- கடற்றொழில் நீரியல்வள அமைச்சு மூலம் வழங்கப்பட்ட அனுமதி, இதில் எதுவுமே செய்ய முடியாதென, மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளும் கைவிரித்துள்ளனர்.

இதையடுத்து, வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் து.ரவிகரனிடம் இதை தெரியப்படுத்தியதாக சம்மேளன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் இவ்வாறன மீன்பிடி அனுமதிக்கு எதிராக உள்ளூர் மீனவர்கள் நீண்ட போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து அப்போதைய அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுடன் நடந்த கலந்துரையாடல்களை தொடர்ந்து, அப்போது வழங்கப்பட்ட அனுமதிகளை இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.