முகமாலை முன்னரங்கம்! ஒரு பெண் போராளியின் நினைவுகள்!

0

எனது தோழி ஒருத்தியை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது,என்னை கண்டவள் ஓடிவந்து கட்டி அணைத்தாள்,

எப்படி இருக்கிறாய் என்றவள் அழத்தொடங்கினாள்,.அவள் இராணுவத்தில் சரணடைந்ததுகூட எனக்குத் தெரியாது.2008 ஆண்டு 9ஆம் மாதம் அளவில் அவளை இறுதியாக சந்தித்திருந்தேன்,அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா..?என்பதுகூட தெரியாமல் இருந்தேன்,

ஆனால் எங்கிருந்தாலும் அவள் நலமோடு இருக்கவேண்டும் என்று நினைப்பேன்,  பத்து வருடங்களின்பின் அவளை பார்க்கிறேன்,பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் சொல்லவா வேண்டும்..?அவளும் எப்போதும் என்னை நினைப்பாளாம் என்றுகூறி கலங்கினாள்,

எனக்கும் கவலையாக இருந்தது,நமக்கான நட்பு போர்க்களத்திலே அல்லவா உருவானது…? ஒவ்வொரு நொடியும் மரணத்தின் தறுவாயில் நின்று நாம் வாழ்ந்த காலங்களும் நேசங்களும்அவை.

இருவரும் சகஜநிலைக்கு திரும்பினோம்.எமது களசூழலில் நடந்த ஒரு சம்பவத்தை இருவரும் நினைவுபடுத்திக்கொண்டோம்.

ஆம் முகமாலை பகுதியில் 2006 ஆண்டு 8மாதம் 14 ஆம் திகதி சமாதான காலத்தின்பின்  இராணுவத்தினருக்கும் எமக்கும் யுத்தம் மூண்டது,பல காவலரண்களில் நாம் நின்றிருந்தாலும் முகமாலை சண்டைலைன்பல சுவாரசிய சம்பவங்கள் தந்த இடம் என்றே சொல்லலாம். அங்கு நடந்த சம்பவத்தையே நினைவுபடுத்திக்கொண்டோம்…

ஒரு காவலரனில் மூவர் நிற்போம்,இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும் சரிசமமாக பகிர்ந்து மகிழ்வோம்,..என்னோடு  கானகி,பாவரசி இருவரும் இருந்தார்கள்,இதில் கானகியின் குழப்படித் தனங்கள் சொல்லித்தீராதென்றே சொல்லலாம்.நன்றாக பயிற்சிகள் செய்வாள்,அதேபோல் கடமையை சரியாக செய்பவள்,ஆனால் அந்தளவுக்கு குழப்படி செய்வாள்.அவளால் தண்டனைகளுக்கு நமக்கு எப்போதும் குறைவிருக்காது,

இந்திய இராணுவத்தை இங்கிருந்து வெளியேறக்கோரி உண்ணா நோன்பிருந்து தாய்மண்ணிற்காக உயிர்நீத்த அன்னை பூபதி அம்மாவின் நினைவுநாள் வந்தது,வழமைபோன்று அவர் உயிர் நீத்த அன்று எமக்கு காலை உணவு வருவதில்லை,

அதனால் பசிதாங்க முடியாமல் இருப்போர் மற்றைய காவலரன்காறர்களிற்கு தெரியாமல் முதல்நாள் இரவு வரும் உணவினை எடுத்துவைத்து மறுநாள் காலையில் சாப்பிடுவோம்,தெரிந்தால் நக்கலடிப்பார்கள்.அதனால் ஒழித்துவைத்து சாப்பிடுவோம்.அன்று இரவு உணவு எடுத்துவைக்க மறந்து விட்டோம்,மறுநாள் காலை சாப்பாட்டு நேரம் கடந்த பிறகே   காலை உணவு வரமாட்டுது என்று தெரிந்தது,

பாவரசி பசி இருக்கமாட்டாள்,அன்றைக்கென்று அரகோரபசி எடுத்தது.சாப்பாடு இல்லாவிட்டால் கூடபசிப்பது வழமைதானே.என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டு நானும் பாவரசியும் கானகியை லைனில் (காவலரனில்)விட்டிட்டு வெளிக்கிட்டோம்.

எங்கே போவது..?எங்கயாவது தேங்காய் மாங்காய் பார்த்து புறப்பட்டோம்.முகமாலை பகுதி தேங்காய்க்கு பஞ்சமில்லாத ஏரியா,ஆனால் எங்கட பிள்ளைகள் நின்றா சொல்லவா வேண்டும்..?பொச்சுமட்டை மட்டும் குவியலா கிடக்கும்,

சரி முன்பக்கம் போவம் என்றுபோனோம் சிறிது தூரத்தில் ஒரு மாமமரத்தில் நான்கைந்து மாங்காய்கள் இருப்பது தெரிந்தது,இருவரும் மாமரத்தில் ஏறிவிட்டோம்,

அக்கா உங்களுக்கு கண்தெரியிறேலயே.உங்களை யார் இதில ஏறச்சொன்னது..? என்று மாமரத்தில் இருந்து ஒரு குரல் வந்தது.அப்போதுதான் பார்த்தோம்.மேலே போராளி ஒருத்தன் வரிஉடையோட இராணுவத்தின் தொலைதூர நகர்வுகளை  கண்காணிக்க(op) நிற்பதை.

அக்காக்கள் உங்களை யார் காவலரனை விட்டிட்டு முன்னுக்கு வரச்சொன்னது.நீங்கள் மரக்கொப்புகளை ஆட்ட ஆமி சினைப்பண்ண போறான்,அநியாயமா நான் சாகபோறன்,உங்களுக்கு அண்ணயிட்ட சொல்லிகுடுக்கிறன் பாருங்கோ என்று முழங்கினான்,

அடக்கடவுளே இது என்ன கொடுமையாகிடக்கு பசியில மாங்காய் ஆயவர இவன்ர புராணத்த தாங்க முடியாம இருக்கு,அதோட தன்ர பகுதி பொறுபாளருக்கு சொல்லபோறன் என்றுவேற சொல்றானே,இவன் தன்ர பகுதி பொறுப்பாளருக்கு சொன்னால் நம்ம பகுதி பொறுப்பாளர் கடும்விசுவாசிவேற அவள் கட்டாயம் நெருப்பெடுப்பாளே,

அவளுக்கு விடயம் தெரிஞ்சா கதை கந்தல்தான் என்று நினைத்துவிட்டு அவனுக்கு சொன்னன் அண்ண கொஞ்சம் பேசாம நிற்கிறீங்களே.சும்மா கத்திக்கொண்டு நிற்காம, மாங்காயை ஆஞ்சிட்டு இறங்குறம்,எங்கட பகுதி பொறுபாளருக்கு தெரியோனும் பிறகு தெரியும் உமக்கு எங்களபற்றி,தகடு(போட்டுக்கொடுக்க) வைக்கவென்றே இருங்கோ என்று வெருட்டினம்,வெருட்டினா விட்டிடுவான் என்று ஒரு நப்பாசையில்,

பாவிபயல் செத்த பாம்பை முழுவேகமா அடிச்சபோலகத்திக்கொண்டு நின்றான்,மனச்சாட்சி இல்லையோ என்றுவேற கேட்கிறானே,பாவரசி சொன்னால் ஆரபி இவன் கட்டாயம் நம்மள எங்கட பொறுபாளரிட்ட போட்டுக்கொடுக்காம விடமாட்டான்போல சரி இறங்கு போவம் என்றால்.இருவரும் மாமரத்தால் இறங்கி ஆய்ந்த நாலு மாங்காயையும் கொண்டு வந்திட்டம்.

காவலரன் வந்து கானகிக்கு விடயத்தை சொல்லிவிட்டு மாங்காயை கல்லில் குற்றி சாப்பிட்டோம்.எதுக்கும் மனசில ஒரு பயம் நம்ம மாட்டிவிடுறானோ தெரியாதென்று,அதேபோல சிறிது நேரத்தில் தொலைத்தொடர்பு கருவி ஒலித்தது.

ஓடிச்சென்று வோக்கியை கையில் எடுத்தேன்,T4 லைனில 16 ஆவது பொயிசனா(காவலரனா) என்று கேட்டார்கள்,ஆம் என்றேன்,

தடியன் நம்மள போட்டுக்கொடுதிட்டான் என்று விளங்கியது,மூவரும் உடுப்பு வாக்குகளோட வேற ஆணி ஒன்று உங்கள் காவலரனுக்கு வருவார்கள் நீங்கள் மூவரும் பின்னுக்கு மெயினுக்கு வாங்கோ என்றது அந்த குரல்,

இனி என்ன போனா கிச்சினில சமையல்தானே.சிறிது நேரத்தில் மூவர் வர நாம் பணிஸ்மன்ல(தண்டனையில்)கிச்சினுக்கு சமைக்கதான் போறம் என்று நினைச்சுபோனம்,

மெயினுக்கு போனதும் பொறுப்பாளர் அம்மாடியோவ் 60  மல்ரிசெல்லும் ஒன்றாக போனபோள கத்தினாள்,உங்களுக்கு சாப்பாடுதானே முக்கியம் ,கடமையில அக்கறை இல்லை என்று தொடங்கினாள்,இனி என்ன செய்வது நம்மிலயும் பிழைதானே,ஆனால் நம்மள போட்டுக்கொடுத்த தடியனை அவன்ர பொறுப்பாளரிட்ட போட்டுக்கொடுக்கணும் என்று ஒரு சபதம் எடுத்தம்.

பத்துநாள் கிச்சின்ல தண்டனையாக நின்றம்,வாறபோறாவளேவேற மாங்காய் இருக்கா மாங்காய் இருக்கா என்று நக்கலடிச்சு உயிர எடுத்திட்டாளே,

தண்டனை முடிய பழைய பொய்சனுக்கு வந்து நமக்கு தண்டன் வாங்கித்தந்த தடியன்ர பெயரை அறிய எவளவு பாடுபட்டம்.சாப்பாட்டுக்கு வந்த கடலையை காயவச்சு தலைக்கு வைக்கிற எண்ணையைவிட்ட ஆமியின்ர சாப்பாட்டு பெட்டிக்க போட்டு பொரிச்சுப்போட்டு சொப்பினில போட்டுக்கொண்டுபோக அன்றைக்கு காவலரனில நம்மட எதிரி தடியனே நின்றான்.கடலையை கொடுக்கேல திருப்பிகொண்டுவந்து வச்சிட்டம்,

மீண்டும் இரண்டு மணித்தியாலம் கழிச்சுபோனம் ஆள் இல்ல,அதனால மற்ற இருவருக்கும் கொடுத்து நட்புறவோடு கதைச்சிட்டு வந்திட்டம்,தடியன்ர பெயர் மலரவன் என்று அறிஞ்சிட்டம்,

கொஞ்சநாள் பேசாமல் இருந்தோம்,ஆனால் சமையல் செய்ய உதவி செய்யும்போது பெரிய டாசர்(பானைகள்)கைகாலில் சுட்டு காயங்கள் இருந்தது,தண்டனை பெற்றதை மறக்கவும் முடியாம இருந்தது,

நாம் பொதுவான கிணறு ஒன்றில்தான் குளிக்கபோவோம்,காலையில் பெண்களும் மாலையில் ஆண்களும் குளிப்போம்,

நாம் காலையில் கிணற்றடிபோனபோது குப்பி(நஞ்சுமாலை) அடையாள தகடு இரண்டும் தடியில் கொழுவியபடி இருந்தது,குளிக்கும்போது கழற்றி வைத்துவிட்டு எடுக்க மறந்துபோய்விட்டார்கள். நாம் அதை எடுத்துவந்து வோக்கி எடுத்து தகட்டு இலங்கத்தை சொல்லிக் கேட்டோம்,

மலரவனின் தகட்டு இலக்கம் என்று கூறினார்கள்,வேறு யாருடையதாக இருந்தாலும் கொடுத்திருப்போம்,பிறகென்ன நம்மள மாட்டிவிட்ட எதிரியின்ர தகடு.குப்பி ஆச்சே விடுவோமா.?அதற்கிடையில் மலரவன் இன்னொருவனை தூதனுப்பியிருந்தான்,தனது குப்பி தகட்டை எடுத்தால் தரும்படி,அவர் துணிஞ்சு வரமாட்டார்,எங்கள மாட்டிவிட்டவர் எப்படி துணிஞ்சுவருவார்..?

அதோட அவனுக்கும் தெரியும் இவளுகள் தராளுகள் என்று, வாய்காற கூட்டம் மச்சான்,போனால் அவமானப்படனுமே தவிர,கடைசி வந்தாலும் இவளே தராலே,எதுக்கும் நீ போய் கேட்டுபார் மச்சான், தந்தால் வாங்கிவா அவளே கூடகதைச்சா விட்டிட்டுவா என்று தானாம் அனுபினவன்,

உங்கட அண்ணயிட்ட எவளவு இறங்கிபோனம் கேட்டவரே,எங்கள மாட்டிவிட்டவர்தானே..?பிறகென்ன தகடு,குப்பி தரேலாதாம் என்று போய் சொல்லும் என்று வந்தவனிடம் சொல்லிவிட்டோம்,

நானும் கானகியும் பேசாமல் விட்டாலும் பாவரசி மலரவனை மன்னிக்க தயார் இல்லை,

பிறகென்ன நம்மட பகுதி பொறுப்பாளருக்கு அறிவிச்சு.ஒப்படைத்தோம்,குப்பி தொலைத்தால் தண்டனையாக ஒரு மாதகிச்சின் செய்யவேண்டும்….

அவற்றையெல்லாம் இன்று நினைத்தால் சிரிப்பாகவும் கவலையாக உள்ளது.இன்று நினைக்கும்போது மலரவனிற்கு தண்டனை பெற்றுக்கொடுத்திருக்கக்கூடாது என்று தோன்றும்,ஆனால் அன்றைய காலங்கள் எமக்கு எல்லாமே ஜாலியா இருக்கும்.தண்டனைகளும் பெரிதாக தெரியாது,

அன்று போரில் பாவரசி மாவீரராகிவிட்டாள்,மலரவனும் அவன் தோழர்களும் இருக்கிறார்களோ இல்லையோ என்பது தெரியாது.போராட்டம் தந்த நினைவுகள் என்றும் எம்மனங்களில் நிழலாக தொடரும்….

–பிரபாஅன்பு–

Leave A Reply

Your email address will not be published.