யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில் குதிப்பு!

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிர்காக்கும் பணியில் ஈடுபடும் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் அசண்டையீனமாக செயற்பட்டதாகவும், அவரை இடமாற்றம் செய்ய வைத்தியசாலை பணிப்பாளர் பின்னடிப்பதாகவும் வைத்தியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கான அறிவித்தலை வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்திக்கு எழுத்து மூலமாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த பணிப்பகிஸ்கரிப்பு நாளை (21) காலை 8 மணி முதல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பான ஆண் தாதி ஒருவர் பணி நேரத்தில் அசண்டையீனமாக இருந்தார் என அவர் கடமையாற்றும் அவசர சிகிச்சை பிரிவு வைத்தியர்கள் கூட்டாக கையொப்பமிட்டு, வைத்தியசாலை பணிப்பாளரிடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

கடந்த டிசம்பர் 23ம் திகதி அந்த அறிக்கை கையளிக்கப்பட்டது. உயிர்காக்கும் பணியில் ஈடுபடுபவர்களின் கவனயீனமான நடவடிக்கையால் ஏற்படும் உயிரிழப்புக்களை சுட்டிக்காட்டி, குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தரை உடனடியாக வேறு பிரிவிற்கு இடமாற்றும்படி அதில் கோரப்பட்டுள்ளது.

எனினும், அந்த முறைப்பாட்டின் மீது வைத்தியசாலை பணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவில்லையென வைத்தியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டு கடந்த மாத இறுதியில் மூவர் கொண்ட விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டு , குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யும்படி அந்த விசாரணைக்குழுவும் பரிந்துரைத்தது.

எனினும், அந்த பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் இன்னமும் இடமாற்றம் செய்யப்ப்டவ்ல்லை என குற்றம் சாட்டியே நாளை அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.