லிப்டுக்குள் சிக்கி மரண பயத்தை அனுபவித்த மஹிந்தவாதிகள்! திக் திக் நிமிடங்கள்….!

0

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் லிப்டுக்குள் சிக்கிய சக உறுப்பினர்களைப் பார்த்து முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன மூச்சு விடுவதைக் குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை சிறிலங்கா நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

நாடாளுமன்றின் எதிர்க்கட்சி வரிசையைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இன்று சபை அமர்வுக்காக சென்றபோது லிப்டில் மேலே சென்றுள்ளனர்.

இதில் தினேஷ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன, விமல் வீரவன்ச உள்ளிட்ட சில உறுப்பினர்கள் ஒன்றாகச் சென்றுள்ளனர்.

லிப்ட் மேல் நோக்கிச் செல்லும்போது இடைவழியில் இறுகி நின்றது. லிப்டின் கதவுகள் மூடப்பட்டிருந்தமையினால் அனைவரது தொலைபேசிக்குமான சமிக்கை நின்றுவிட்டது.

இதனால் வெளியிலுள்ளோருடனும் தொடர்புறமுடியாமல் லிப்டினுள் மாட்டியவர்கள் தத்தளித்துள்ளனர். சிலர் உயிரைக் காப்பாற்றும் பௌத்த மந்திரங்களை ஓதியுள்ளனர்.

இந்த நிலையில் லிப்டினுள் சூடு அதிகரிக்கத்தொடங்க எல்லோருக்கும் பயப்பீதி தொற்றிக்கொண்டது. இதன்போது முன்னாள் கல்வி அமைச்சரும் ஆசிரியருமான பந்துல குணவர்த்தன அனைவரையும் சுவாசிப்பதைக் குறைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மன அழுத்தத்தைக் குறைத்து மூச்சைக் கட்டுப்படுத்தி அளவோடு சுவாசிக்குமாறு கேட்டுக்கொண்டதாக ஸ்தலத்தில் இருந்த உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மேலே சென்ற லிப்ட் நீண்ட நேரமாக இயங்காமல் இருப்பதைக் கண்ட ஏனையோர், உள்ளே சிலர் சிக்கியிருப்பதை அறிந்து நாடாளுமன்ற பொறியியலாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த பொறியியலாளர்கள் லிப்டினை சரிபார்த்து அனைவரையும் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் காப்பாற்றியுள்ளனர்.

வெளியே வந்த சம்மந்தப்பட்ட உறுப்பினர்கள், தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் எனுமளவுக்கு பெருமூச்சுடன் காணப்பட்டதாக நேரில் கண்டவர்கள் குறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.