விஜய்சேதுபதி ஒரு அரக்கன்: சேரனின் புகழாரம்

0

விஜய்சேதுபதி ஒரு அரக்கன் என்று ’96’ படத்தின் 100-வது நாள் விழாவில் இயக்குநர் சேரன் புகழாரம் சூட்டினார்.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ’96’. நந்தகோபால் தயாரித்த அப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். மாபெரும் வெற்றியடைந்து திரையரங்கில் சுமார் 100 நாட்கள் கடந்துள்ளதால் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இதில் ’96’ படக்குழுவினரோடு இயக்குநர் சேரன், இயக்குநர் பார்த்திபன், திருமுருகன்காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் இயக்குநர் சேரன் பேசியதாவது: ’96’ டீஸரில் இது ‘ஆட்டோகிராப்’ மாதிரி என்று போட்டிருந்தார்கள்.

ஆனால், இது ‘ஆட்டோகிராப்’ அல்ல. அது வேற, ’96’ வேற. ‘ஆட்டோகிராப்’ படம் காதலும் கடந்து போகும். அதையும் தாண்டி இந்த உலகத்தில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது என்று சொல்லியிருப்பேன். ஆனால், அதையும் தாண்டி ’96’ ஒரு வலி மிகுந்த படம். இப்படம் பார்த்துவிட்டு பிரேம்குமார் மீது பொறாமையே வந்தது. ரொம்ப நாளைக்குப் பிறகு நல்ல இயக்குநரைப் பார்த்திருக்கிறேன், நல்ல படைப்புகளை இவரால் கொடுக்க முடியும் என நினைத்தேன்.

இவரை நாம் போட்டியாக எடுத்துக் கொள்ளலாம் என எண்ணினேன். தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவை எடுத்துக் கொண்டால் கூட, 2 கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு படம் பண்ணுவது கடினம். படம் முழுக்க இருவரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இருவரையும் தாண்டி நம் கண் வேறு எதையும் பார்க்கத் தோன்றவில்லை. இதற்காக பிரேம்குமார் எவ்வளவு மெனக்கிட்டு இருப்பார் என தெரிகிறது.

இருவரிடமிருந்து எவ்வளவு அழகாக நடிப்பை வாங்கியிருந்தார். விஜய்சேதுபதி ஒரு அரக்கன். அவரிடம் வேலை பார்ப்பது , பிசாசுவிடம் வேலைப் பார்ப்பது போல் இருக்கும் என நினைக்கிறேன். எனக்கே இந்த பிசாசுவிடம் எப்படி வேலை பார்க்கப் போகிறேன் என பயமாக இருக்கிறது. ஒவ்வொரு ப்ரேமிலும் எப்படி வந்து நின்று நடிக்கிறீர்கள் என தெரியவில்லை. என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது.

உங்களுக்கு ஆண்டவன் நிறைய ஆயுளும், நிறைய படங்களும் கொடுக்க வேண்டும். இந்த சினிமா உங்களை மறக்க முடியாத அளவுக்கு பெரிய உயரத்துக்கு நீங்கள் சொல்ல வேண்டும். ஒரு பொம்மையாக, நாயகனுடன் நடனமாடும் நாயகியாகவே பார்த்த எங்களுக்கு நடிகை த்ரிஷாவாக தெரிந்தார்.

எக்ஸ்ப்ரஷன்களை அவ்வளவு கண்ட்ரோல் பண்ணி நடித்திருந்தார். இப்படத்தின் ஜானுவை இன்னொரு 20 வருஷத்துக்கு மறக்க மாட்டார்கள். நீங்களே இன்னொரு படம் பண்ணித்தான் இதை உடைக்க முடியும். இப்படத்தில் பள்ளி மாணவர்களாக நடித்த அனைவருமே பிரமாதமாக நடித்திருந்தார்கள். இவ்வாறு சேரன் பேசினார்

Leave A Reply

Your email address will not be published.