விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டுமா? கேள்வி எழுப்பும் சிறிலங்கா அமைச்சர்!

0

புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வன்னியிலே வாழ்ந்த மலையக வம்சாவளி தமிழ் மக்கள் சமத்துவமாக தமிழினத்துக்குள்ளே உள்வாங்கப்பட்டார்கள் என்றும் அவர்கள் காலத்தில் பாரபட்சம் இருக்கவில்லை என்றும் சிறிலங்காவின் தேசிய சக வாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இன்றைய வடகிழக்கு அரசியல்வாதிகள் புலிகளின் பெயரைச் சொல்லி அரசியல் செய்துகொண்டே மலையக மக்களை நிராகரித்துவருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் அவர் கூறுகையில்,

”இன்று புலிகளின் பெயரைச் சொல்லி வாக்கு வாங்கி அரசியல் செய்யும் சில அரசியலர்கள் கூட வடக்கில் வாழும் மலையக வம்சாவளி தமிழர்களின் அரசியல், கல்வி, காணி, சமூக உரிமைகளை மறுப்பதை நானறிவேன். இவர்களுடன் சேர்ந்து சில தமிழ் அதிகாரிகளும் வடக்கில் வாழும் மலையக வம்சாவளி மக்களை புறந்தள்ளுவதும் எனக்கு தெரியும்.

இன்று சமாதானம் வந்துவிட்டது, நிம்மதி வந்துவிட்டது, சட்டத்தின் ஆட்சி வந்துவிட்டது, ஆனால் அன்று இருந்த சமத்துவம் காணாமல் போய்விட்டது என்று கேள்வியெழுகிறது. ஆகவே இன்னும் விடுதலைப்புலிகள் வந்து ஆட்சி புரியவேண்டுமா? விடுதலைப் புலிகள் மீண்டும் வந்து இங்குள்ள ஒடுக்குமுறையாளர்களைப் பார்த்து இங்கிருக்கக்கூடிய மலையக மக்களை அடக்கவேண்டாம், ஒடுக்கவேண்டாம், அவர்களை சமத்துவமாகவே கணியுங்கள், கணித்து தமிழினத்துக்குள்ளே நியாயமான முறையில் சரியான முறையில் உள்வாங்குங்கள் என்று புலிகள் மீண்டும் வந்து கூறவேண்டுமா?

ஆனால் அத்தகைய புலிகளின் பெயரைச் சொல்லி அவர்களின் கொள்கையை எதிர்த்து, மலையக மக்களை எதிர்த்து அரசியல் செய்பவர்களை நான் அறிகிறேன்.” என காரசாரமாக கூறியுள்ளார்.

இதேவேளை இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன்,

”இவர்களை திருத்த விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டுமா? இந்த இலட்சணத்தில் தமிழின ஒற்றுமை எங்கே அய்யா உருவாகப்போகிறது?

தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். அதற்கு தமிழினத்துக்குள் இருக்கின்ற உள்ளக சமத்துவத்தை மறுக்கும் ஜாதிய, பிரதேச, மத வேறுபாட்டு காரணிகளை அடையாளம் கண்டு தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உள்ளக சமத்துவம் வராது. உள்ளக சமத்துவம் இல்லாவிட்டால் தமிழின ஐக்கியம் வராது. அதுமட்டுமல்ல, நமக்குள் ஓரிரு பிரிவினரை ஒதுக்கி வைத்துக்கொண்டால், பேரினவாதிகள் எம்மை ஒடுக்குகிறார்கள் என ஓலமிடும் தார்மீக உரிமையும் எமக்கு இல்லை.

வெறுமனே நாம் எல்லோரும் தமிழர்தான் என சினிமா “வசனம்” பேசிக்கொண்டு இருந்தால் காரியம் நடக்காது. எனது இந்த நோக்கத்தை புரிந்துக் கொள்ளுங்கள். நான் அன்றும் இதைதான் சொன்னேன். இன்றைய அரசியல் பரப்பில் இருக்கும்வரையும் இதைதான் சொல்வேன். நாளையும் சொல்வேன். நான் சொல்வதை இன்று புரிந்துக்கொள்ள முடியாவிட்டால், நாளை நான் இங்கிருந்து போனபின் புரிந்துக்கொள்வீர்கள்.” என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.