இக்காலத்துப் பெண்கள் எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கின்றனர்?

0

பொத்தாம் பொதுவாக எல்லோரும் கூறுவது போல நிறைய படிப்பு, பதவிசான வேலை, 6 இலக்க சம்பளம், சொந்தமாக வீடு, கார் இருக்க வேண்டும் இப்படியான எதிர்பார்ப்புகள் எல்லாம் பெண்ணைப் பெற்ற பெற்றோருக்கு வேண்டுமானால் இருக்கலாம். அவர்களின் கௌரவத்திற்காகவோ அல்லது மகளின் எதிர்கால நலன் கருதியோ இத்தகைய எதிர்பார்ப்புகளை பெற்றோர்கள் வைத்திருக்கலாம்.

ஆனால் தற்போதைய பெண்களின் எதிர்பார்ப்பு இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் படித்து, நல்ல வேலைக்கு செல்வதால்‌ தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளை நன்றாக அறிந்து வைத்துள்ளனர். எதிர்காலம் சார்ந்த பொருளாதார சிக்கல்களைக் கூட ஆணுடன் சேர்ந்து அவர்களால் சமாளிக்க முடியும் எனும் சூழலில் அவர்கள் மணமகனிடம் எதிர்பார்ப்பது சராசரி கல்வியறிவு சராசரி வேலை என்பது மட்டுமே. பொருளாதாரம் சார்ந்து அவர்களின் எதிர்பார்ப்பு அவ்வளவே.

அடுத்து குணத்தை எடுத்துக்கொண்டால் பெண்கள் எதிர்பார்ப்பது தனக்கான அங்கீகாரத்தையும் சுதந்திரத்தையும் தருவாரா என்பதுதான். தற்போது பெரும்பாலான பெண்கள் முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை உபயோகித்து வருகின்றனர். 4 வருடங்களுக்கு முன்பு அதுநாள் வரை இயங்கிக் கொண்டிருந்த சீனியர் அக்காவின் முகநூல் கணக்கு அவரின் திருமணத்திற்கு பிறகு காணாமல் போனது. அக்காவிடம் விளக்கம் கேட்ட போது தான் முகநூல் உபயோகிப்பது தன் கணவருக்கு பிடிக்காததால் தன் கணக்கை அழித்து விட்டதாகக் கூறினார். சில மாதங்களுக்கு முன் தோழிக்கு திருமணம் நடந்தது. திருமண நிகழ்வை தோழியின் கணவர் முகநூலில் பதிவிட்டு அவளையும் டேக் செய்திருந்தார். இன்றைய பெண்கள் எதிர்பார்ப்பது இந்த சுதந்திரத்தைத் தான்.

திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லலாமா, வேண்டாமா என்பதில் இருந்து ஆடை, நண்பர்கள், சொந்த பந்தம் போன்றவற்றில் தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை பெண்கள் ஒரு போதும் தவறாகப் பயன்படுத்துவது இல்லை. இந்த சுதந்திரத்திற்கு உள்ளாகவே அவர்களை மதிப்பது, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது என எல்லாம் அடங்கி விடுகின்றது.

கணவனாக மட்டுமில்லாமல் ஒரு நல்ல நண்பனாகவும் இருக்க வேண்டும். பெண்ணின் உடன்பிறந்தோருடனும், பெற்றோருடனும் அந்நியமாக, அந்த காலத்தைப் போல் மாப்பிள்ளை முறுக்கெல்லாம் காட்டாமல் சகஜமாக பழக வேண்டும். அவர்களிடம் மட்டுமல்லாமல் எல்லோரிடமும் சகஜமாக, கலகலப்பாகப் பழகுபவராக இருக்க வேண்டும்.

எப்போதும் வேலை வேலை என்றில்லாமல் மனைவிக்கும், மற்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் நேரம் ஒதுக்குபவராக இருக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.