ஐ.நா தீர்மானத்தை சிங்கள அரசு மதிக்குமா?

0


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 42ஆவது மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈழத்தில் சிங்கள அரசினால் இனப்படுகொலைப் போர் முன்னெடுக்கப்பட்ட பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் பல்வேறு தடைவைகள் இலங்கை தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இறுதிப்போர் தொடர்பில் விவாதிக்கப்பட்டும் உள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஐா.நாவில் ஈழ இனப்படுகொலை விவகாரம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சிங்கள அரசுமீதான உலகத்தின் – ஐ.நாவின் அணுகுமுறை வேறாக காணப்பட்டது. அக் காலத்தில் இலங்கையின் இறுதிப் போரில் மனித உரிமைகள் இடம்பெற்றதாகவும் அதற்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியம் என்றும் ஐ.நா தெரிவித்தது. அக் கால கட்டத்தில் சர்வதேசம் விசாரணை ஒன்றை மேற்கொள்ள முடியாது என்றும் விரும்பினால், இலங்கை அரசு ஒரு சர்வதேச விசாரணையை நடத்தும் என்றும் மகிந்த ராஜபக்ச கூறினார். அத்துடன் சில சர்வதேச நீதிபதிகளை இணைத்து அவர் விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைத்து கண்துடைப்பில் ஈடுபட்டு சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்கொள்ள முயற்சித்தார். 

ஆனால் 2015இற்குப் பின்னர், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சர்வதேசத்தின் அணுகுமுறை மாறியது. இலங்கையில் சர்வதேசத்திற்கு நெருக்கமான ஆட்சி ஒன்று மலர்ந்தது. இந்த நிலையில் இலங்கையில் இடம்பெற்ற பாரிய போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்றுக்கு கால அவகாசத்தை சர்வதேசம் வழங்கியது. 2015ஆம் ஆண்டில் 30/1 என்ற தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் தற்போதைய சிங்கள அரசானது, கடந்த நான்கு ஆண்டுகளாக தமது அரசின் இருப்பிற்கான அரசியலில் ஈடுபட்டுள்ளதுடன் சர்வதேசத்தில் இருந்து தம்மை பாதுகாக்க பல்வேறு உபாயங்களை கையாண்டு வருகின்றது. 

மகிந்த ராஜபக்ச, தன்னுடைய காலத்தில் மாபெரும் சர்வதேச நெரு்கடி வரும் என அஞ்சினார். லிபிய ஜனாதிபதி முகம்மர் கடாபிக்கு நடந்ததுபோல தனக்கும் நடக்கும் என அஞ்சினார். மின்சாரக் கதிரையில் இருத்தப்படக்கூடும் என்றும் தூக்குக் கயிற்றில் தொங்கக் கூடும் என்றும் அவர் அஞ்சினார். மைத்திரியும் ரணிலும் அதிலிருந்து மகிந்தவை காப்பாற்றுவோம் என்று பகிரங்கமாக கூறினார்கள். தாம் ஆட்சியில் அமராவிட்டிருந்தால், மகிந்த இன்று மின்சாரக் கதிரையில் அமர்ந்திருப்பார் என்றும் சொன்னார்கள். ஏனெனில் மகிந்த ராஜபக்ச ஈழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலையின் கொடூரத்தை அவர்களுக்கு நன்றாக தெரியும். அவர்களும் அதன் சூத்திரதாரிகள். 

இந்த நிலையில், தற்போது கடந்த காரம் ஜெனீவா மனித உரிமை அமர்வுகள் இடம்பெற்றன. இதன்போது இலங்கைக்கு ஆதரவாக, இலங்கை அரசும் இணை அனுசரனை வகிக்கும் தீர்மானம் 40/1 என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  “தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் இலங்கை அரசால் காலவரையறை குறிப்பிடப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும்” என்ற வாசகம் புதிய தீர்மானத்தின் முன்னுரையில் புதிகாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஏனைய விடயங்கள் அனைத்தும் முன்னைய தீர்மானத்தின் உள்ளடக்கங்களே.  பிரிட்டன், ஜேர்மனி, கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து முன்வைத்த இந்தத் தீர்மானத்துக்கு திருத்தங்களின்றி இணை அனுசரணை வழங்குவதற்கு இலங்கை அரசு இறுதி நேரத்தில் இணங்கிக் கொண்டது.  

இதற்கான தீர்மான முன்வரைவு, ‘இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் முன்வைக்கப்பட்டது.  இதற்கமைய 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கை அரசு மீதான ஐ.நாவின் கண்காணிப்பு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது  
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள சபையின் 43ஆவது கூட்டத்தொடரில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தில், 2021 மார்ச் மாதம் விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் விரிவான அறிக்கையுடன், சபையில் விவாதம் ஒன்று நடத்தப்படும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.  ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் இந்தத் தீர்மானத்தில், 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசத்திற்கு சிங்கள அரசு என்ன பதில் அளித்துள்ளது? என்ன மரியாதை வழங்கியுள்ளது? ஜெனீவாவில் சில நாட்கள் மாத்திரம்தான் சிங்கள அரசுக்கு தூக்க கலக்கம். அதன் பின்னர் அதை எல்லாம் மறந்து ஒரு ஆண்டுக்கும் இரு ஆண்டுக்கும் தமது அரசியலில் ஈடுபடும். ஜெனீவாவில் வாக்குறுதி வழங்கிவிட்டு எஞ்சிய தமிழ் இனத்தை அழிப்பதும், தமிழ் ஈழ நிலத்தை அபகரிப்பதும்தான் சிங்கள அரசின் வேலை. ஐ.நா தீர்மானத்திற்கு இலங்கை அரசு அனுசரணை வழங்கியுள்ளது, ஒரு தனிநபரது தீர்மானம் என்கிறார் கோத்தபாய. ஐ.நா என்ன சொன்னாலும் கலப்பு நீதிமன்றத்திற்கு அனுமதிக்க மாட்டோம் நாமே தீர்மானிப்போம் என்கிறார் ரணில். ஐ.நா விடயத்தில் ரணிலும் கோத்தபாயவும் ஒன்றுதான். 

மகிந்த காலத்தில், மகிந்தவும் கோத்தாவும் எதை சொன்னார்களோ, அதனையே இன்று ரணிலும் மைத்திரியும் சொல்கிறார். ரணிலும் மைத்திரியும் தெற்கில் தமது அரசியலில் அடி பட்டாலும் இனப்படுகொலை விவகாரத்தில், ஐ.நா விவகாரத்தில் ஒன்றுபட்டு தமிழ் இனத்தை வஞ்கிறார்கள். எனவே, சிங்கள அரசை நம்பாது, சிங்கள அரசின் காலவ அவகாச நடகங்களை நம்பாது, சிங்கள அரசின் விசாரணைகளை சம்பாது, சர்வதேச விசாரணக்குச் சென்று, இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்று, ஈழத் தமிழ் மக்கள் சுய நிர்ணய ஆட்சியை அடைவதே இனப்படுகொலைக்கும் ஜெனீவா நாடகங்களுக்கும் ஒரே தீர்வாகும். 

ஆசிரியர், 24.03.2019

Leave A Reply

Your email address will not be published.