“செல்வராகவன்கிட்ட ‘பாகுபலி’ பட்ஜெட்ல பாதியைக் கொடுத்திருந்தா?’’

0

“அவர் படமெல்லாம் ரிலீஸான உடனே ஹிட் ஆகாது. ஆனா, ஒரு சில வருடத்துக்குப் பிறகு உச்சாணிக் கொம்புல ஏறி திரும்ப அங்கிருந்து கீழே இறங்காது!” என உலக சினிமா ரசிகர்களால் செல்லமாகப் புகழப்படும் இயக்குநர் செல்வராகவன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

``செல்வராகவன்கிட்ட 'பாகுபலி' பட்ஜெட்ல பாதியைக் கொடுத்திருந்தா?’’ #HBDSelvaraghavan

ட்விட்டரில் அவர், `இம்’ என்றால் “ `ஆயிரத்தில் ஒருவன் 2′ எப்போது வரும்?” என்றும், `ஆம்’ என்றால், “ `புதுப்பேட்டை 2′ எப்போது வரும்?” என்பதுமாக… ஒருவரின் எல்லா போஸ்டுகளிலும் கேள்விக்கணைகள் குவியும் என்றால், அவர்தான் செல்வராகவன்! “அவர் படமெல்லாம் ரிலீஸான உடனே ஹிட் ஆகாது. ஆனா, ஒரு சில வருடத்துக்குப் பிறகு உச்சாணிக் கொம்புல ஏறி திரும்ப அங்கிருந்து கீழே இறங்காது!” என உலக சினிமா ரசிகர்களால் செல்லமாகப் புகழப்படும் இயக்குநர் செல்வராகவனுக்கு இன்று பிறந்தநாள்.

செல்வராகவன் - இரண்டாம் உலகம்

தன் ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையில் எவ்வளவு பெரிய இடைவெளி இருந்தாலும், ஒவ்வொரு படத்தையும் தலையில் வைத்துக் கொண்டாடும் ஒரு பெரும் பட்டாளத்தை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர், செல்வா. அப்படி என்னதான் இருக்கிறது இவர் படங்களில்? பொதுவாக திரைப்படத் திறனாய்வாளர்கள் பயன்படுத்தும் ஒரு சொல்லாடல் உள்ளது. அதுதான், `காட்சிமொழி’. செல்வராகவனின் சிறப்பம்சம் இந்தக் காட்சிமொழிதான்.

`மயக்கம் என்ன’ படத்தின் ஒரு காட்சியில், தான் எடுத்த புகைப்படங்களெல்லாம் “ `ஆய்’ போட்டோ” என கார்த்திக், யாமினியிடம் ஒரு பேருந்து நிலையத்தில் நின்று அழுது புலம்புவான். அப்போது, கார்த்திக்கின் பின்புறம் நின்றுகொண்டிருக்கும் யாமினியின் கார் ஹெட்லைட் விட்டு விட்டு சிமிட்டிக்கொண்டிருக்கும். அதேபோல, கார்த்திக்கை ஆசுவாசப்படுத்தும் யாமினியின் பின்புறம் தூரத்தில் ஒரு விளக்கு பளிச்சென்று எரிந்துகொண்டிருக்கும். சிமிட்டிக்கொண்டிருக்கும் அந்த காரின் லைட், கார்த்திக்கின் மனநிலையையும், பளிச்சிடும் விளக்கு யாமினியின் மனநிலையையும் வெளிப்படுத்தும் விதத்தில் காட்சிமொழி கையாளப்பட்டிருக்கும். 

செல்வராகவன் - தனுஷ்

இப்படி செல்வராகவனின் படங்களின் ஒவ்வொரு ஃப்ரேமையும் படம்பிடித்துப் பக்கம் பக்கமாகக் கட்டுடைப்பு செய்யலாம். அதிலும், `புதுப்பேட்டை’ முற்றிலும் வேறு ரகம்! `Neo Noir’ ஜானரில் உருவான இப்படத்தில், சிவப்பு – பச்சை ஒளிகளில் தன் கதை மாந்தர்களின் உள்ளுணர்வுகளை விவரித்திருப்பார். இதைப் பற்றி பேசாத சினிமா ரசிகனே இல்லை எனலாம்.

சிறிய பட்ஜெட் படங்களை எடுத்துக்கொண்டிருந்த செல்வராகவன், திடீரென ரசிகர்களுக்கு விஷுவல் விருந்து வைத்த படங்கள்தான், `ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் `இரண்டாம் உலகம்’. `பாகுபலி’ பட்ஜெட்ல பாதியை இந்தப் படத்துக்குக் கொடுத்திருந்தா, `ஆயிரத்தில் ஒருவன்’ எப்படி இருந்திருக்கும் தெரியுமா… எனச் சில செல்வராகவன் வெறியர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கேட்டுக்கொண்டிருந்தாலும், அதெல்லாம் இல்லாமலேயே வெறும் லைட்டிங் வைத்தே அந்தப் பிரமாண்டத்தைக் காட்டியவர், செல்வா என்பவர்களும் உள்ளனர்.

உண்மைதான். அந்தப் படத்தின் சில காட்சிகளை எந்தவித கிராஃபிக்ஸ் உதவியும் இல்லாமல் ஒளி, ஒலி வடிவமைப்பிலேயே செதுக்கியிருப்பார். ஒரு காட்சியை உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், கார்த்திதான் உண்மையான சோழ தூதுவன் என்பதை அனைவரும் உணரும் காட்சி, அந்தக் குகையின் விட்டத்தில் இருக்கும் துளை வழியாக வெளிச்சம் பரவிடும்போது அதில் கார்த்தி மட்டும் தனியாகத் தெரிவதும், மேலும் 5 நிமிடங்களுக்கு எந்த வசனமும் இல்லாமல் வெறும் உணர்வுகளால் அந்த வலியைச் சொல்வதும் என மிரட்டியிருப்பார்.

ஆயிரத்தில் ஒருவன்

அந்தக் காட்சிக்கு ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் பலமாக இருக்கும். அதன்பின் அவர் எடுத்த `இரண்டாம் உலக’த்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருப்பார். இருவேறு கதைக்களம், வெவ்வேறு வகையான மனிதர்கள்… இரண்டையும் இணைக்கும் காதல் என்ற பொது உணர்வு. இவையெல்லாம் ஹாரிஸால் இசையிலும் வேறுபடுத்திக் காட்டப்பட்டிருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, செல்வா – யுவன் என்றால்தான், அது மேஜிக் கூட்டணி! யுவனுக்கு செல்வராகவனின் படங்கள் ஓர் அடையாளம் என்றும், செல்வரகவனுக்கு யுவனின் பாடல்கள் ஓர் அடையாளம் என்றும் சொல்லுமளவுக்கு ஒன்றோடு ஒன்றாகக் கலந்துகிடந்தன இவரது படங்களும், அவரது பாடல்களும்.

செல்வா படம் என்றால் மட்டும் அவர் ஸ்பெஷலாக வேலை செய்வார் என யுவனின் மற்ற இயக்குநர்கள் அவ்வப்போது கோபித்துக்கொள்வார்கள். யுவன் அப்படி ஒருதலைபட்சமாக வேலை செய்பவரில்லை என்றாலும், `காதல் கொண்டேன்’, `7ஜி ரெயின்போ காலனி’, `புதுப்பேட்டை’ படங்களின் ஆல்பத்தைக் கேட்கும்போது, மெய் சிலிர்க்காமல் இருந்ததும் இல்லை.

செல்வா - தனுஷ்

யுவனின் பாடல்களைக் காட்சிப்படுத்துவதில் செல்வராகவனின் மெனக்கெடல் திரையில் நன்றாகத் தெரியும். குறிப்பாக, `புதுப்பேட்டை’ படத்தில் கமல்ஹாசன் பாடிய `நெருப்பு வாயினில்’ பாடலைப் படமாக்கிய விதம், அதற்கு முன்னும் பின்னும் தமிழில் யாராலும் மேற்கொள்ளப்படாத முயற்சி. அதேவேளையில், `ஒரு நாளில்’ பாடலைப் படத்தில் சேர்க்காதது ஒரு பெரிய குறையாக வைக்கும் ரசிகர்களும் இருக்கின்றனர்.

பாடல்களைச் செல்வா காட்சிப்படுத்துவது ஒருபுறமிருக்க, அவர் எடுக்கும் காட்சியை யுவன் பின்னணி இசைப்படுத்துவது இன்னோர் அம்சம். `7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் வடஇந்திய வழக்கத்தின் படி, அனிதா சல்லடை வழியாகத் தன் வாழ்க்கைத் துணையைப் பார்க்கும் காட்சி. அப்போது இந்துஸ்தானி மெட்டில் ஓர் இசைக் கோர்வை பின்னணியில் அமைந்திருக்கும். வீட்டில் பார்த்து முடித்த பையனுக்குப் பதிலாக, கதாநாயகன் அவள் முன் தவறுதலாக வந்து நிற்கும்போது அந்த மெட்டு அப்படியே ஒரு ஹம்மிங்காக மாறும். அந்தக் காட்சியில் யுவனும், செல்வாவும் சேர்ந்து ஸ்கோர் செய்திருப்பார்கள்.

7ஜி ரெயின்போ காலனி

இப்படி செல்வாவின் படங்களின் காட்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் பேசினால், பேசிக்கொண்டே இருக்கலாம். காட்சிமொழியை ஒரு தனி மொழியாகவே அங்கீகரித்தோம் என்றால், செல்வராகவனை அதில் பெரும்புலவர் என்றுதான் சொல்லவேண்டும். அவருடையது எல்லாம் காட்சிகள் அல்ல, கவிதைகள். இத்தனை அழகான கவிதைகள் படைத்த, காட்சிமொழிப் புலவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Leave A Reply

Your email address will not be published.