தருமபுரி விழா மேடையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் – அன்புமணி முரண்பட்ட பேச்சு!

0

தருமபுரி வள்ளலார் திடலில் தெற்கு ரயில்வே சார்பில், மொரப்பூர் டு தருமபுரி இடையிலான ரூ.358.95 கோடி மதிப்பீட்டில், 36 கி.மீட்டர் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகனும், அன்புமணியும் முரண்பட்டுப் பேசியது அ.தி.மு.க, பா.ம.க-வினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், “தருமபுரி மாவட்டத்திற்குப் புதிய ரயில் பாதை திட்டத்தைக் கொண்டுவந்த மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸுக்கும் மாவட்ட மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள். இந்தப் புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்ய தேவையில்லை’’ என்றார். தருமபுரி மாவட்டத்தில் மாநில அரசின் நிதியுடன் 5-க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை அவர் சுட்டிக் காட்டிப் பேசினார். 

அன்புமணி ராமதாஸ் பேசும்போது, “மகிழ்ச்சியான ஒரு தருணத்தில் நான் இருக்கிறேன். காரணம், தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டுக்கால கனவுத் திட்டத்தை, மத்திய ரயில்வே துறையை 19 முறை அணுகி இந்தத் திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறேன். இந்தத் திட்டத்தின் மூலம் தருமபுரி, மாநிலத் தலைநகர் சென்னையுடன் இணையப் போகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் 3 லட்சம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகக் கூடிய சூழல் ஏற்படுத்தியுள்ளது. இனி தருமபுரி மாவட்டம் புதிய வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும்’’ என்றவர். 

“இந்த ரயில்வே திட்டத்தை நிறைவேற்றக் கூடிய சாதகமான சூழல் முன்பு ஒருமுறை தமிழகத்திலிருந்தது, அப்போது தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை’’ என்று மாநில அரசைக் குற்றம் சாட்டிப் பேசினார். இது கே.பி.அன்பழகன் பேச்சுடன் முரண்பட்டது. ஒரே மேடையில் அமைச்சர் கே.பி.அன்பழகனும், அன்புமணி ராமதாசும் முரண்பட்டுப் பேசியது பார்வையாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. அ.தி.மு.க, பா.ம.கவினர் இடையே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

காரணம், சில நாள்களுக்கு முன்பு இதே அன்புமணிக்கு, கே.பி.அன்பழகனும் ஏற்பட்ட வார்த்தை மோதலில் கே.பி.அன்பழகனுக்கு ஆண்மை இருக்கிறதாக என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த கே.பி.அன்பழகன், அன்புமணியைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இப்போது கூட்டணி அமைந்த பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் அமைச்சர் கே.பி.அன்பழகனும், அன்புமணியும் குழம்பிப்போய் பேசுவதாகக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் முணுமுணுத்துச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.