திருட்டுத்தனமாகவே ஜெனிவாவில் தீர்மானத்துக்கு இணை அனுசரணை! ஒருபோதும் ஏற்கமாட்டேன்- மைத்திரி

0

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஜெனிவாவிலுள்ள இலங்கைத் தூதுவர் திருட்டுத்தனமாகவே கையொப்பமிட்டுள்ளார். எனவே, இணை அனுசரணை வழங்கப்பட்டுள்ளதை ஏற்கமுடியாது. அதை நான் நிராகரிக்கின்றேன்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்தார்.

களுத்துறை, மீகஹதென்ன பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத்தை இன்று (27) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“ஐ.நா.மனித உரிமைகள் சபையால் வெளியிடப்படும் அறிக்கையிலுள்ள சரியான விடயங்களை ஏற்பதற்கு தயாராக இருக்கும் அதேவேளை, அதிலுள்ள தவறான விடயங்களை ஒருபோதும் ஏற்கமாட்டோம்.

யார் என்ன கூறினாலும் இலங்கையின் அரசமைப்பின் பிரகாரமே நடவடிக்கை இடம்பெறும். அதற்கு அப்பால் எதையும் செய்யமாட்டோம் என்பதையும் உறுதியாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்குமாறு ஆரம்பத்திலேயே கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், அக்கோரிக்கையை நான் நிராகரித்தேன். ஐ.நா. உரையில்கூட இவ்விடயத்தை சுட்டிக்காட்டி பேசியிருந்தேன்.

நாடொன்றின் வெளிநாட்டுக் கொள்கை, வெளிநாட்டு உறவு ஆகியன தொடர்பில் ஜனாதிபதிக்கே கூடுதல் பொறுப்பு இருக்கின்றது. எதையாவது செய்வதாக இருந்தால் முன்கூட்டியே அறிவிப்பு விடுக்கவேண்டும்.

ஆனால், ஜனாதிபதியான எனக்கோ, வெளிவிவகார அமைச்சருக்கோ அறிவிக்காமல் ஜெனிவாவிலுள்ள இலங்கைத் தூதுவர், இணை அனுசரணை வழங்கும் யோசனைக்கு பெப்ரவரி 25 ஆம் திகதி கையொப்பமிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பை வெளியிடுவதுடன், அந்த யோசனையையும் நிராகரிக்கின்றேன்.

எனக்கு அறிவிக்கப்படாமல்தான் ஜெனிவாவில் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நாட்டில் இப்படித்தான் பல சம்பவங்கள் நடக்கின்றன.

அதேவேளை, ஜெனிவாவுக்குச் செல்லவிருந்த தூதுக்குழுவை இறுதிநேரத்தில் மாற்றியமைத்தேன். வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவில் ஆற்றவிருந்த உரையிலும் திருத்தம் செய்தேன்” – என்றார்

Leave A Reply

Your email address will not be published.