`வெளியில் தலைகாட்ட முடியல, தற்கொலை முடிவில் இருக்கோம்!’-பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் வேதனை

0

கல்லூரி மாணவிகளை காதல் என்ற பெயரில் ஏமாறி அழைத்துச் சென்று ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்த பொள்ளாச்சி கும்பல் மீதான வழக்கை திசை திருப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார். `அரசியல் ஆதாயத்துக்காக தவறான தகவல் பரப்பி எங்களது குடும்பத்துக்கு களங்கம் விளைவிக்கப்படுகிறது. ஆகையால்,  நாங்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருக்கிறோம்’ என்று அவர் கலெக்டரிடம் வேதனை தெரிவித்தார்.

கடந்த 24-ம் தேதி, பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் , ஃபேஸ்புக் மூலம் ஒரு கல்லூரிப் பெண்களிடம் நட்பாகி, ‘அவுட்டிங்’ என்ற பெயரில் வெளியில் அழைத்துச்சென்று அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து பலவந்தமாக ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்து வந்த  சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகிய நான்கு பேர் கொண்ட  கும்பல் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கும்பலிடம் ஏராளமான பெண்கள் சிக்கியுள்ளதாகவும் இதன் பின்னணியில் அரசியல் புள்ளிகளின் வாரிசுகளின் தலையீடு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதால் தமிழகம் கொந்தளித்துக்கிடக்கிறது. இதில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண் பேசுவதுபோல இன்று காலையில் ஆடியோ வெளியானதையடுத்து, அந்தப் பெண்ணின் அண்ணன் தனது நண்பர்களோடு இன்று கோவை கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

மனு அளிக்கும்போது கலெக்டரிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன், “இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் சொல்லித்தான் நடவடிக்கை எடுத்தார்கள். நாங்கள் புகார் சொன்ன நபர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்துவிட்டனர். அதன் பிறகும், எதற்காக ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்துகிறார்கள். இவர்கள் யாரை கைது செய்யச் சொல்லி இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. வேறு யாரேனும் பாதிக்கப்பட்டு அதற்கான ஆதாரம் இருந்தால் அதைக்கொடுத்து நடவடிக்கை எடுக்கச் சொல்லலாம். அதற்கு நாங்களும் சப்போர்ட் செய்வோம். ஒருசிலர் அரசியல் ஆதாயத்திற்காக தவறான தகவல்களைப் பரப்புவதால் எங்களுடைய  குடும்பத்துக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள். இதனால் நாங்கள் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருக்கிறோம். தவறான தகவல் பரப்பி வழக்கை திசை திருப்ப முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

 பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் தரப்பு மனுவை பெற்றுக்கொண்ட கோவை கலெக்டர் ராசாமணி பத்திரிகையாளர்களிடம், “பொள்ளாச்சியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறையான  விசாரணை  நடத்தப்பட்டு வருகிறது.  திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் , சதீஷ் ஆகிய நால்வர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.  புகார் கொடுத்த பெண்ணைப் போல மேலும் சில பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.  வழக்கை திசைதிருப்ப அரசியல் ரீதியாக முயற்சிகள் நடக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்திருக்கிறார்கள். 

பொள்ளாச்சி ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக கோவை கலெக்டரிடம் மனு

அவர்களுக்கு  களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவிப்போரின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.  தேவையின்றி பெண்ணின் குடும்பத்தினருக்கு மனவேதனை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நன்னடத்தை விதி அமலில் இருப்பதால் அதற்கு உண்டான விதிமுறைகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய கலெக்டர் ராசாமணி, இந்த வழக்கு இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை. இதில் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக மகளிர் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.