கடந்த காலங்களில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் வீரியமான போராட்டங்கள் நடைபெற்ற சமயத்தில், சினிமா பிரபலம் ராகவா லாரன்ஸ் மேற்கொண்ட சில நடவடிக்கைகளால், நாம் தமிழர் கட்சிக்கும் அவருக்கும் இடையே சில உரசல் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், சினிமா பிரபலம் ராகவா லாரன்ஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில், தனது மாற்றுத்திறனாளி நடன பள்ளியை சேர்ந்த மாணவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் வளர்ந்து வரும் ஓர் அரசியல் தலைவரின் கட்சியினர் இடையூறு செய்வதாகவும், தன்னைப்போன்றே சில சினிமா பிரபலங்களும் – அரசியல் தலைவர்களும் அந்த குறிப்பிட்ட தலைவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தோடு இவற்றையெல்லாம் நிறுத்திக்கொள்ளாவிட்டால், தானும் அரசியல் களத்தில் குதிக்க வேண்டியிருக்குமென தெரிவித்திருந்தார்.
லாரன்ஸ் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்த அரசியல் தலைவர் சீமான் தான் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருந்த சூழலில், அவ்வாறான சம்பவங்கள் ஏதும் நடைபெற்றிருந்தால் தாம் லாரன்ஸிடம் வருத்தம் தெரிவிப்பதாக கருத்து வெளியிட்டிருந்தார் சீமான்.
இந்த நிலையில், யூட்யூப் பக்கம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ள லாரன்ஸ், எனது தாய் என்னிடத்தில் அரசியலுக்கு செல்லவேண்டாம் என்ற காரணத்தினால் அரசியல் ஈடுபடமாட்டேன். ஆனால், என்னாலான சமூக பணிகளை எளியோர்களுக்காக என்றும் செய்வேன் என தெரிவித்துள்ளார்.