கொழும்பில் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கொலை வழக்கின் இரண்டாம் சந்தேக நபரான கொமாண்டர் சுமித் ரணசிங்கவின் கீழ் செயற்பட்ட சிறப்பு புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களை விசாரித்து வருவதாக சி.ஐ.டி. இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றுக்கு அறிவித்தது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா இதனை கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்தார்.
அத்துடன் இந்த விவகாரம் குறித்து, முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னகொடவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவர் வழங்கிய வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிவானிடம் தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இருந்து வெள்ளை வேனில் ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தி, கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தின் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.