உரிமைகளுக்காக பாதிக்கப்பட்ட தரப்பினர் ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் மேற்கொள்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் முகமாக இன்னும் ஒரு தரப்பினர் செயற்படுகிறார்கள். இது சூடானில் இடம்பெற்று வரும் மக்கள் ஆர்ப்பாட்டம், கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி தொடக்கம் அங்கு பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
நாட்டில் அதிகரித்துள்ள உணவுப் பொருட்களின் விலைகள், எரிபொருள் விலையேற்றம் மற்றும் நிதிப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் அங்கு தொடர்வதால் பொதுமக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனையிட்டு நேற்று முன்தினம் ‘கார்த்தோம்’ பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, இரண்டு வயலின் கலைஞர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் சூடானில் பிரபலமான பாடல் ஒன்றை இசைக்கின்றனர்.
அதனை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் காணொளி பதிவு செய்து வௌியிட்டுள்ளார். அதில் ஆர்ப்பாட்டக்குழுவொன்று இசைக் கலைஞர்களை சூழ்ந்து கொண்டு கைகொட்டி பாடுகின்றனர்.
“உலகத்துக்கு சொல்லுங்கள் நான் சூடானியன் என்று, நான்தான் எனது நாடு, நான் சூடானியன்” என்ற அர்த்தப்படும் படி அவர்கள் இசைத்து பாடி ஆடி கோஷங்களை எழுப்பினர்.
கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பித்த போராட்டங்கள் வளர்ந்து தற்போது நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இது அந்த நாட்டு ஜனாதிபதி ஒமர் அல்-பாஷிரின் ஆட்சிக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
