பொது வெளியில் கருத்து மோதலில் ஈடுபடுவதை உடன் நிறுத்துமாஶ்ரீலங்காவின் அமைச்சர்களான சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்று அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.
எனினும் நேற்று நடைபெற்ற இருவேறு நிகழ்வுகளின் போது அமைச்சர்களான சஜித்தும், ரவியும் பரஸ்பர கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டிருந்தனர்.
அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், எனக்கு அரசியல்வாரிசு கூட கிடையாது. நான் பரம்பரைக்காக அரசியலையோ அல்லது தலைமைத்துவத்தினையோ எதிர்பார்க்கவில்லை. நாட்டின் எதிர்காலம் கருதி இன, மத, மொழி, பேதம் கடந்து மக்கள் சேவை ஆற்றுவதற்கு தயாராகிவிட்டேன். இதனைக் கண்டு சிலர் அச்சம் கொண்டுள்ளனர்.
இதனால் சஜித் பிரேமதாச கட்சிக்குள் சூழ்ச்சி செய்கின்றார் என்று பரப்புரை செய்கின்றார்கள். இவ்வாறான கட்டுக்கதைகளைக் கேட்டு பொதுமக்களாகிய நீங்கள் ஏமாற்றம் அடைந்துவிடாதீர்கள். நான் ஒருபோதும் எனது கட்சியையோ அல்லது எனது கட்சியின் தலைவரையோ காட்டிக்கொடுக்கவில்லை.
71ஆவது தலைமை அமைச்சர் பதவி காலடியைத் தேடிவந்தபோதுகூட அதுவேண்டாம் என்று நிராகரித்த நபர் தான் சஜித் பிரேமதாச என்பதை நினைவு படுத்த விரும்புகின்றேன்.
மேலும் தலைமை அமைச்சர் பதவியை விரும்பாததால் அதற்கும் மேலான பதவியை எதிர்பார்கின்றேன் என்று அர்த்தம் கொண்டுவிடமுடியாது. நான் அவ்வாறான உயரிய பதவிகளுக்குச் செல்ல விரும்புகின்றேன்.
அதனை மக்களே தீர்மானிக்க வேண்டும். அவர்களின் ஆணையுடன் தான் அந்த பதவிகளை வகிக்க விரும்புகின்றேன். குறுக்கு வழியில் சூழ்;ச்சி செய்து அந்த பதவிகளை பெறுவதற்கு நான் ஒருபோதும் விரும்பவில்லை. சூழ்ச்சி செய்வதாக கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுபவர்கள் நீண்ட ஆயுளுடன் நிறைவாக வாழ வெண்டும் என்று வாழ்த்துகின்றேன் – என்றார்.
இதேவேளை, பிறிதொரு வைபவத்தின் பின்னர் அமைச்சர் ரவி கருணாநாயக்க கருத்து வெளியிடுகையில்,
நாங்கள் அரசியல் அறிவைக் கொண்டிருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பாதையில் கொண்டுசெல்வதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிக்கின்றோம்.
அரசதலைவர் வேட்பாளரையும் மக்கள் விரும்புபவரையே நிறுத்துவோம். வேட்பாளராக வருவதற்கு ஆசைப்படுபவர்கள் தமது தராதரம் தொடர்பில் சிந்திக்க வேண்டும். பொருத்தமானவர்களா என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
பெயர் இருக்கின்றது என்பதற்காக எதனையும் சாதித்து விடமுடியாது. உரிய வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் – என்றார்.
இதேவேளை, அமைச்சர் நவீன் திசாநாயக்க குறிப்பிடுகையில்,
அமைச்சர்களான ரவி கருணாநாயக்கவும், சஜித் பிரேமதாசவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள். அவர்களுக்கு இடையில் சிறு பிரச்சினை காணப்படுகின்றது என்றால் அதனை பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்.
பொதுவெளியில் கருத்துக்களை தவிர்க்குமாறு நேற்று (நேற்று முன்தினம்) தலைமை ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி ஊடாக அறிவுரை வழங்கியுள்ளார். கட்சிக்குள் நாம் இந்த விடயங்களை பேசி முற்றுப்புள்ளி வைப்போம் – என்றார்.