மியான்மர் சிறையில் அடைபட்டிருக்கும் இரு பத்திரிகையாளர்களுக்கு புலிட்ஸர் பரிசு

0

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வரும் பகுதிகளில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரம் அடைந்தது.

மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

அவ்வேளையில், ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசின் தடையையும் மீறி பிரபல செய்தி நிறுவனமான ‘ராய்ட்டரஸ்’ பத்திரிகையாளர்கள் இருவர் அங்கு நுழைந்து சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக ராணுவம் ஆடிய வெறியாட்டத்தையும், மனித உரிமை மீறல்களையும் வெளியுலகத்துக்கு அம்பலப்படுத்தினர்.

குறிப்பாக, ரகானே மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 சிறுபான்மையின மக்களை முழங்காலிட்டு அமர வைத்து, துப்பாக்கிகளால் சுட்டு 10 பிரேதங்களையும் ஒரே குழியில் புதைத்த அரச வன்முறையின் கோர முகத்தை இவர்கள் வெளிப்படுத்திய விதம் மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இதையடுத்து, நாட்டு ரகசியத்தை வெளிப்படுத்திய குற்றத்தின்கீழ் வா லோன், யாவ் சோய் ஊ என்ற இரு பத்திரிகையாளர்களை யாங்கூன் போலீசார் கைது செய்தனர்.

இவர்களுக்கு எதிரான வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச நாடுகள் முன்னர் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தன.

இவ்விரு பத்திரிகையாளர்களையும் விடுதலை செய்ய ‘ராய்ட்டரஸ்’ செய்தி நிறுவனம் சர்வதேச அளவில் பெருமுயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், பத்திரிகை உலகின் மிகவும் உயரிய ‘புலிட்ஸர் பரிசு’க்கு சிறையில் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள வா லோன் மற்றும் யாவ் சோய் இருவரும் தேர்வாகியுள்ளனர்.

சர்வதேச அளவில் பத்திரிகையுலகில் 21 பிரிவுகளின் கீழ் ஆண்டுதோறும் தகுதியான நபர்கள் இந்த சிறப்புக்குரிய ‘புலிட்ஸர் பரிசு’க்கு தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பதக்கத்துடன் 15 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் அளிக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.