தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகளில், தமிழ் திரைப்பட பிரபலங்கள் தங்களது வாக்கினை ஆர்வமாக பதிவு செய்து வருகின்றனர்.
12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 07 மணி முதல் வாக்குபதிவுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அனைவரும் தங்களது வாக்கினை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அத்தோடு திருவான்மியூரில் உள்ள பாடசாலையில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வாக்கினை பதிவு செய்தார்.
நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள பாடசாலையில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
நடிகர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள பாடசாலையில் வாக்கினை பதிவு செய்தார். இதற்கு முன்னர் கமல் வாக்குப்பதிவு செய்த பாடசாலையில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால், காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.


