உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா என்ற இடத்தில் இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளத்தில், மரப்பொருள்கள் மற்றும் மின்சாதன பொருட்களை விற்பனை செய்யும் ஷோரூம் இருந்துள்ளது. அதற்கு மேல் இருந்த தளங்களில் அதன் உரிமையாளரின் குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதும், அங்கிருந்த நாய் ஒன்று இடைவிடாமல் குரைக்க ஆரம்பித்தது. அதனால் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் விழித்து பார்த்த போது தான், தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை அறிந்தனர். உடனே சுமார் 30 பேர் பத்திரமாக வெளியேறி தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.
இருப்பினும், தீப்பிடித்து எரிந்த ஒரு வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், 30 பேரின் உயிரைக் காப்பாற்றிய நாய் பரிதாபமாக உயிரிழந்தது. சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த 4 கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.