சிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்! நினைவு தினம் இன்று

0

 சமர்க்கள நாயகன் –
பதினோராம் ஆண்டு நினைவு தினம் இன்று.

சங்க காலத்திலே அரசனை விட போர்த்தளபதியே அனைவர் மனங்களிலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பார்..!! யுத்த களத்தில் தன் படை வீரர்களுடன் முன்னின்று கட்டளையிட்டபடி சமர் செய்வான் தளபதி..!! அத்தனை தடை வியூகங்களையும் உடைத்தெறிந்து படை நடத்துவான்..!! இதை சங்ககால இலக்கியங்கள் எங்களுக்கு படம் போட்டு காட்டியிருக்கும்..!! 
சங்காலமே வியந்து நிற்கும் அளவிற்கு ஒரு போர் வீரன், போர் கட்டளை தளபதி இருபதாம் நூற்றாண்டிலே இருந்தார்..!! இது உண்மை இதிலே எந்த திரிபுகளும் கிடையாது..!! சமர்களத்தில் சீறும் புலி அவர்..!! தெலை தொடர்பு ஒட்டு கேட்கும் கருவியில் அவர் குரல் கேட்கிறதெனில் எதிரி படையே நடுங்கி போகும்..!! அவர் தான் கால் வைத்த சமரெல்லாம் வெற்றி காணும் சமர்க்கள நாயகன் தான் எங்கள் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்..!!
2003ம் ஆண்டு சமாதான காலமது.!! தன் இதய நோய் சத்திரசிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுவந்த பால்ராஜ் அவர்களை எதிரிபடை தளபதிகள் ஒரு தடவையாவது கண்டுவிட பெரும் ஆவல் கொண்டது அவ்வீரனிற்கான தனிப் பெரும் சிறப்பு எனலாம்..!! பால்ராஜ் எனும் நாமம் சிங்கள மக்களிடையே இன்றும் நிலைத்திருக்கிறது..! பொய் எனில் கேட்டு பாருங்கள்..!!
இவ்வாறு தன் வீரத்தால் எதிரியையும் அதிசயிக்க வைத்த அந்த வீர தளபதியின் வீர வரலாறினை சுருக்கமாக பார்க்கலாம்..!! [ தளபதிகள் ஆற்றிய உரைகளும் சில நெருக்கமானவர்களின் வார்த்தைகளுமே ஆதாரம்]

Image may contain: 1 person, closeup

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரை பிரதேசமான கொக்குத்தொடுவாயில் கந்தையா கண்ணகி தம்பதிகளின் ஐந்து பிள்ளைகளில் நான்காமவராக 1965ல் அவதரித்தார் பாலசேகரன்..!
மீன்பிடியையும் காலநிலைக்கேற்ற விவசாயத்தையும் தொழிலாகக் கொண்ட கந்தையாவுக்கு நான்கு ஆண்பிள்ளைகள் ஒரு பெண்பிள்ளை. இவர்களில் நான்காவது பிள்ளையான பாலசேகரனே குடும்பத்தில் கெட்டிக்காரப் பிள்ளை..!
இவர் தனது ஆரம்பக் கல்வியை கொக்குத்தொடுவாயிலும் பின்னர் உயர் கல்வியை புல்மோட்டையிலும் பயின்றார்.
கொக்குத்தொடுவாயும் புல்மோட்டையும் கடற்கரை பிரதேசங்கள் என்பதால் அங்கே வரும் சிங்கள மீனவர்களுடன் உரையாடிய காரணத்தால் பாலசேகரன் சிறு பராயத்திலேயே சிங்களம் பயின்றார்..! அத்துடன் ஆங்கிலத்திலும் ஓரளவு நன்றாகவே உரையாடக் கூடியவர். கல்விப் பொதுத் தராத சாதாரன பரீட்சையில் பாலசேகரன் மிகச் சிறந்த பெறுபேறுகள் பெற்றதால் அவரை பல்கலைக்கழகம் அனுப்பும் எண்ணத்துடன் இருந்தார்கள் அவரின் பெற்றோர்..!

Image may contain: 6 people, people smiling, people standing and outdoor


பெற்றோரின் கனவு இவ்வாறாக இருந்த போதும் பாலசேகரனது கனவு வேறாக இருந்தது. தாய்நாட்டைக் காக்கும் பணிக்கு எவ்விதத்திலாவது பங்காற்ற வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் வேரூன்றத் தொடங்கியது.
1982 காலப்பகுதியில் அப்பகுதியில் புளொட் இயக்கத்துக்காக வேலை பார்த்த சுந்தரம், மாணவனாக இருந்த பாலசேகரனை புளொட் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டாலும் ஒரு வருடமாக எந்த வித நடவடிக்கைகளிலும் புளொட் ஈடுபடாததினால் பொறுமையிழந்தார் பாலசேகரன். குடும்பத்தில் வேறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் சிறிது காலம் ஒதுங்கியிருந்தார் பாலசேகரன்…!!
ஆனால் 1983ல் நடைபெற்ற இனக்கலவரம் எல்லாவற்றையும் மாற்றியது. இளைஞர்கள் சாரை சாரையாக பல்வேறு இயக்கங்களிலும் சேரத் தொடங்கினார்கள்…!!துடிப்புமிக்க இளைஞனான பாலசேகரனுக்கு வேகமாக செயல்படக் கூடிய ஒரு இயக்கம் தேவைப்பட்டது. ஆகவே இம்முறை அவர் தேர்ந்தெடுத்தது விடுதலைப் புலிகள் இயக்கத்தை..!! பகுதி நேர உறுப்பினராகவிருந்த பாலசேகரனது கடமை தவறாத துடிப்பு மிக்க உழைப்பு தலைமையை கவர்ந்தது என்றாலும் முழு நேர இயக்க உறுப்பினராக்கப் படவில்லை.
ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது. இராணுவத்துடனான மோதல் ஒன்றில் எதிர்பாராதவிதமாகக் காயம்பட்ட பாலசேகரன் சிகிச்சைக்காக தமிழகம் அனுப்பப்பட்டார்..! காயப்பட்ட பாலசேகரன் சிகிச்சை பெறுவதற்காக தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் தான் சத்திர சிகிச்சை பெற்றிருந்தார் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா. அவர் இளைஞனான பாலசேகரனுடன் உரையாடியபோதுதான் மணலாறுப் பகுதியின் மீதான அவரின் பரிச்சயம் தெரிய வந்தது மாத்தயாவிற்கு…!!

Image may contain: 1 person, hat

சிகிச்சைகள் முடிவில் தமிழகத்திலேயே சிறப்பு இராணுவ பயிற்சியினை நிவர்த்தி செய்த பாலசேகரன் பின்னாளில் மாத்தையாவின் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். சிறிது காலத்தின் பின்னர் போர் முனையிலும் சண்டையிட்டார்கள்…!!
பால்ராஜ் தனது முதல் முத்திரையை 1986ல் கிளிநொச்சி கரடிப் போக்குச்சந்தியில் அமைந்திருந்த இலங்கை இராணுவ மினி முகாம் மீதான தாக்குதலில் காட்டினார். கிளிநொச்சி முகாமை சுற்றி வளைக்கும் மாத்தையாவின் திட்டம் முழுமை பெறாவிட்டாலும் கரடிப் போக்குச்சந்தியிலிருந்த மினி முகாமைக் கைப்பற்றினர் பால்ராஜ் உள்ளடங்கிய போராளிகள்..!!
மாத்தையா புலிகள் இயக்கத் துணைத் தளபதியாக நியமிக்கப் பட்டபின்னர் ஒட்டு மொத்த வன்னிப்பிரதேசத்தின் தளபதியாகவும் ஆனார். அவரது தலைமையில் ஜெயம், சுசீலன், பசீலன் ஆகியோர் முறையே வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர்…!!
பசீலனின் உதவியாளராக நியமிக்கப்பட்ட பால்ராஜ் மணலாற்றுப் பகுதி மீது அவருக்கிருந்த பரிச்சயம் காரணமாக அங்கு நிலை கொள்ள வைக்கப்பட்டார்.
இந்தியப் படைகளுடனான யுத்தம் மூண்ட பின்னர் தலைவரும் முக்கிய தளபதிகளும் வன்னியில் முகாமிட்டனர். அப்போது முல்லைத்தீவினதும் குறிப்பாக தலைவரினது பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப் பட்டவர் லெப்.கேணல் நவம் என்கின்ற டடி. அவரது உதவியாளரானார் பால்ராஜ்.
இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. தலைவர் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பினார். வன்னி மைந்தனான பால்ராஜ் வன்னிபிரதேசத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
பிரேமதாஸா அரசுடனான சமரச முயற்சியின் பின்னர் மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.
பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றினர்..! அத்தாக்குதலில் நான்கு முனைகளில் ஒன்றிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட பால்ராஜ் சுற்றுலா விடுதி முகாமைக் கைப்பற்றிய போதும் மற்ற மூன்று முனைகளிலும் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.
1991 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர் பால்ராஜ் . தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.
பால்ராஜ் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்திய சமர்களாக யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் நடவடிக்கைகளாகும். அப்போது இராணுவத்தில் கேணலாகவிருந்த சரத் பொன்சேகா தலைமையில் ஆனையிறவிலிருந்து வடக்காக யாழ்ப்பாணம் நோக்கிப் நடத்தப்பட்ட யாழ்தேவி இராணுவ நடவடிக்கையை வெறும் ஆறே நாட்களில் முறியடித்த பெருமை பால்ராஜையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையில் காலில் கடும் காயங்களுக்குள்ளானார் பால்ராஜ். அதன் பின்னர் ஊண்டு கோளின் உதவியுடனேயே நடக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார் பால்ராஜ். சரத் பொன்சேகாவும் இந்நடவடிக்கையில் காயமடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ்தேவி நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டதோடு இரண்டு ரி 55 டாங்கிகளையும் புலிகள் கைப்பற்றினர்…!!
1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையின் ஒட்டுமொத்த நடவடிக்கையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பால்ராஜ் தலைமையில் பூநகரி முகாமை தீபன் உள்ளிட்ட போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு உள்ளிட்ட போராளிகளும் தகர்த்தனர்..!!
1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் பின்னர் இடம்பெற்ற சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான தாக்குதல்களையும் தலைமை தாங்கினார் பால்ராஜ்.
யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல் மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள்…!

பால்ராஜ் தலைமையில் ஓயாத அலைகள் 1 என்ற பெயரில் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட
இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கையில் இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளை கைப்பற்றினார்கள் புலிகள்..!!
ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது அதற்கெதிரான புலிகளது எதிர்த்தாக்குதலுக்கு பால்ராஜ் தலைமை தாங்கினார்..!!

1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள் 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதேயாகும். இத்தாக்குதலுக்கும் பால்ராஜே தலைமை தாங்கினார்…!!
1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.
ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.
1,500 போராளிகளுடன் மார்ச் 18 2000 ல் குடாரப்பில் தரையிறக்கிவிடப்பட்ட பால்ராஜ் தலைமையிலான போராளிகள் கிட்டத்தட்ட 34 நாட்கள் தாக்குப்பிடித்து ஆனையிறவுக்கான விநியோகப் பாதையை துண்டித்ததன் மூலமே ஆனையிறவு கைப்பற்றப்பட்டது. இத் தாக்குதலின் மூலம் உலக அளவற்கு பேசு பெருளானார் பால்ராஜ் அவர்கள்..!! இடையில் `வத்திராயன் பொக்ஸ்` சண்டை வேறு. பால்ராஜ் தலைமையிலான போராளிகளை வெளியேற்ற படையினர் எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் போய் விட்டது. இந்தச் சமரே சமர்களுக்கெல்லாம் தாய்ச் சமர் என்று கருதப்படுகிறது…!!
யுத்த மேதையான தலைவரே பால்ராஜை தன்னை மிஞ்சிய போராளி என்று பாராட்ட வைத்த சமர் அது..!
2001 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை பால்ராஜ் தலைமையில் சின்னாபின்னமாக்கினர் புலிகள்…!!
பின்னர் சமாதான காலப் பகுதியில் 2003ல் சிங்கப்பூர் சென்று தனது இருதய நோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொண்டார் பால்ராஜ். விமான நிலையத்தில் அவரை ஒரு தடவையாவது கண்டுவிட நின்ற சிங்கள இராணுவ தளபதிகள் அவருக்கு கொடுத்த மரியாதை உலகறிந்ததே..!!.அதன் பின்னர் அவருடைய உடல்நலக் குறைவால் உச்ச சண்டைகளை தலைமை தாங்க முடியாமல் போனாலும் தனது காத்திரமான பங்களிப்பை வழங்கியதோடு நில்லாமல் புலிகளின் பயிற்சிப் பாசறைகளின் ஆசானானார். தனது யுத்த தந்திரோபாயங்களை மற்றவர்களுடன் பங்கிட்டார்.!!
ஈழப் போர் நான்கில் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. 2008ம் ஆண்டில் மூன்று மாதங்களை மருத்தவமனையில் செலவிட்ட அவர் மே 20 ல் தனது சொந்த மண்ணிலேயே மாரடைப்பால் வித்தாகிப் போனார்…!!
சில களங்களில் புலிகளுக்கு தோல்வி என்ற நிலை வரும் போதும் சண்டைக்களத்தில் திடீரெனப் பிரவேசித்து புதிய வியூகங்களை அமைத்து முன்னின்று வழிநடத்தி சண்டையை வெற்றிப் பாதையில் திருப்பிய சமர்க்களங்களின் சரித்திர நாயகன் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்..!!

Leave A Reply

Your email address will not be published.