முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நெருப்பாய் தகித்தது பிரபாகரனின் தேசம்!

0

இன்று மே 18. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினம். ஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட நாளை நினைவு கூறுகின்ற நாள். இது இனப்படுகொலை தினங்களில் குறியீட்டு நாள். சிங்கள அரசின் இனப்படுகொலையை இந்த உலகுக்கு எடுத்துரைக்கும் ஒர் கறுப்பு நாள்.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போர் நடைபெற்று இந்த வருடத்துடன் 10 ஆண்டுகள் ஆகின்றன. இனப்படுகொலையை செய்த அரசாங்கம் எந்த விதமான குற்ற உணர்வும் இல்லாமல் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்களுக்கான நீதியை வழங்குகின்ற – பொறுப்பு கூறுகின்ற எந்த ஒரு வெளிப்பாட்டையும் சிங்கள அரசு மேற்கொள்ளவில்லை.

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை போர் குற்றமாக சர்வதேச சமூகம் அணுகுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை அவ்வாறே குறிப்பிடுகின்றது. இன அழிப்பு என்றால் ஓரினம் தொகுதி தொகுதியாக திட்டமிட்டு கொல்லப்படுவதே இனஅழிப்பு எனப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் மாத்திரமின்றி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் அவ்வாறே இன அழிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலை மாத்திரமன்றி 30 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு படுகொலைகளும் இதற்கு சாட்சியாக உள்ளன. ஆனால் சர்வதேச சமூகத்தை பொறுத்தவரை இலங்கையை மயிலிறகால் நீவி விடுகின்ற ஒரு வேலையைத்தான் செய்து வருகின்றது. இவ்வாறு செய்வதே, சிங்கள அரசை தொடர்ந்தும் இனப்படுகொலை செய்யத் தூண்டுகின்ற ஒரு செயற்பாடாகும்.

ஐஎஸ் பயங்கரவாதிகள் கட்டுப்படுத்துகிறோம் என்கின்ற சாக்குப்போக்கில் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் அதிகரிக்கப்பட்டுள்ளனர். இராணுவ சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 16ஆம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் கைது செய்யப்பட்டு மே 16ஆம் தேதி விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பார்க்கும் பொழுது, இவை அனைத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கின்ற ஒரு நடவடிக்கைகளாகவே தென்படுகின்றன.

இப்படியான சூழலிலும் இன்று வடக்கு கிழக்கு எங்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு அனைத்துச் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதுமாத்திரமன்றி முள்ளிவாய்க்காலில் பெருந்திரளான மக்கள் திரண்டு தங்கள் மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இம்முறை பொதுச்சுடரினை ராகினி என்கின்ற சிறுமி ஏற்றிவைத்தார். இவர் முள்ளிவாய்க்காலிலேயே பிறந்த ஒரு குழந்தை. முள்ளிவாய்க்காலில் செல்லடியில் தன்னுடைய தாயார் கொலை செய்யப்பட்ட போது அதனை அறியாது அவர் பால் குடித்துக் கொண்டிருந்தார். அதில் தன் ஒற்றை கையையும் இழந்தவர் இவர். இச் செய்தி வெளியாகி பலரையும் உலுக்கி இருந்தது. அச் சிறுமி பொதுச்சுடரினை ஏற்றி வைத்த காட்சி நெஞ்சை பதறவைத்தது.

உண்மையில் இந்த காட்சி இனப்படுகொலைக்கான நீதிபதிகளை நீதிக்கான போராட்டத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு குறியீடாகவே தென்பட்டது. சிங்கள அரசு பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து இனப்படுகொலையை மூடி மறைத்தாலும் ராகினி போன்ற சிறுமிகள் இனப்படுகொலைக்கான நீதியை வலியுறுத்தி போராடிக் கொண்டிருப்பர். பாதிக்கப்பட்ட இனத்தில், இனப்படுகொலை செய்யப்பட்ட இனத்தில் ஒரு குறியீடுதான் ராகினி.

போரிலே தாயை இழந்து தன் ஒற்றைக் கையை இழந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற அந்த மாணவியின் தோற்றமே சிங்கள இனப்படுகொலை அரசின் கொடூர முகத்தை வெளிப்படுத்துகின்றது. அவர் மாபெரும் கேள்வியாக இந்த உலகின் முன் நிற்கிறார். ராகினியை போன்ற பல சிறுமிகள் சிறுவர்கள் அங்கங்களை இழந்த நிலையில் இன்று முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய காட்சி கூட உண்மையிலேயே நெஞ்சை பதற வைத்தது. இவ்வாறான செயல்களை எல்லாம் செய்வதுதான் இலங்கை அரசின் போர் வெற்றியாக இருக்கிறது.

10 ஆண்டுகள் ஆன போதும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் குருதி இன்னும் காயவில்லை. காயம் ஆறவில்லை. எங்களுடைய நெஞ்சங்களில் இன்னமும் குருதி வழிந்து கொண்டிருக்கிறது. இந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் தமிழர்கள் நாம் ஒற்றுமையுடன் போராட வேண்டும். தாயகத்தில் உள்ள மக்களும் புலம்பெயர் தேசங்களில் உள்ள மக்களும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதியை கோருகின்ற போராட்டத்தில் உளப்பூர்வமாக பங்களிப்பு செய்ய வேண்டும். இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நீதி தான் அவர்களுக்கு உண்மையான அஞ்சலியாகும்.

ஆசிரியர், ஈழம்நியூஸ். 18.05.2019

Leave A Reply

Your email address will not be published.