சிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா

0

நீந்திக் கடந்த பேராற்றின்
வலிகளைக் கடக்கும்
இரகசிய மாத்திரை
உனது நினைவுகள்

என் வீட்டுப் பூக்களைப் பறித்து
சட்டை செய்திருப்பேன்
நீ வருவாயென
பாலை மரங்களின் கீழ்
பசுமை வரைந்திருப்பேன்
நீ வருவாயென
பள்ளி மேசைகளில்
கோலம் வரைந்திருப்பேன்
நீ வருவாயென
வாய் மொழி கொண்டு
வர்ணம் வடித்திருப்பேன்
நீ வருவாயென
இன்னுமின்னும் உன் கதைகளை
காண்பவர் செவிகளிலூற்றியிருப்பேன்
நீ வருவாயென

வரமுடியாத உனக்கு இரண்டு
பெயர்களைச் சூடினர்
சிம்மச் சாத்தான்கள்.

ஒன்று காணாமல் ஆக்கப்பட்டவள்
இரண்டு முள்ளியின் ஊழியில் கொல்லப்பட்டவள்

இருவர்ணத் தோணிகளில்
இரவுகளைச் சுமந்தனவென்
நினைவு மேனி

உன்மீதான ஆத்ம கூடலை
எப்பாடல்கொண்டு பாடுவேன்
எக்கணத்தை சீவிப்பேன்

சாதித்த மலர்களின்
வாசகங்களை அணிந்து பூசிக்கத் தலைப்படுகிறேன்
என்றோவொருநாள்
உன்மீதான நினைவுகளுக்கு உயிர்வருமென

அன்று மலரும் தென்றலில்
புட்பகஞ் செய்து பறந்து களிப்பேன்
அன்று என் இருதய யன்னல்
உலகின் ஒப்பற்ற காதல் பறவையாய்
சிறகு விரிக்கும்

அதே கணத்தில்
உனக்கான பூவினைச் சூடி ஆனந்திப்பேன்
தலைவர் கூறியது போல்
எல்லாப் பூக்களுக்கும் வாசமுண்டென

Leave A Reply

Your email address will not be published.