ஈழத்தாயவர் திவலை துடைக்க யாருமில்லை! த. செல்வா

0

வற்றிய உதடு
வரண்ட கண்கள்
இருண்ட தேகமென
நூற்றைக் கடந்த தாயவர் பூமியில் வாடியது நிலம்

வவுனியா மன்னார் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் கிளிநொச்சியென அனைத்து நிலங்களும்
படங்களால் நிறைந்தது

நாட்கள் ஆயிரத்தைக் கடந்தது
ஆட்சியின் திரை திறந்து மூடப்படுகிறது
ஆனாலுமென்ன
நமது நிலத்தின் காட்சிகள்
கண்ணீரில் கிடந்தது

முள்ளிவாய்க்காலில் அழைத்துச் செல்லப்பட்ட மகனெங்கே
இராணுவத்துடன் கையளிக்கப்பட்ட கணவனெங்கே
முகாமில் பிடித்துச் செல்லப்பட்ட மகளெங்கே
அப்பா எப்ப வருவார்

என வாசகங்களின் சோகம் நிறைந்துகிடக்க
ஈழத்தாயவர் திவலை துடைக்க இங்கு யாருமில்லை

நடுநிசிக் கணமதில்
திறக்கப்படுகிறது
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம்
இனி காணாமல் ஆக்கியோர் நீதிபதிகளாகி
தராசுகளைச் சுமக்க
தாயவர் கண்ணீர் குற்றக் கறைகளாகும்

நீதியின் சன்னிதியில்
தர்மத்தின் சக்கரத்தில்
குருதிக் கறை நிறையும் மண்ணில்

இற்றைவரை காயவில்லை
நிலத்தின் அழுகைகள்

ஆங்கோர் குழந்தையின் கதறல்
அப்பா அப்பா எனக் கேட்டவண்ணமிருக்க

அப்பாவருவாரா
வராவிடின் குழந்தையின் மனதுள்
வேட்கைபூக்குமா
இனி ஒரு விதி நீளுமா

காலமே உன்நீதியின்
தூரிகை கொண்டு
மீட்பர்களாய் வா
இல்லையேல்
வற்றிய உதடுகளும்
வரண்ட கண்களும்
குழந்தைத்தின் கதறல்களும்

நெருப்பில் துகள்களாவதை
தடுக்க எந்த புத்தனாலும் முடியாது போகும்.

தா. செல்வா

Leave A Reply

Your email address will not be published.