எழுக தமிழுக்கு ஆதரவு வழங்குங்கள்.

0

எழுக தமிழ் நிகழ்வுக்கு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை பூரண ஆதரவை வழங்குவதுடன் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பையும் ஏற்படுத்துகின்றோம்.

அன்பார்ந்த தமிழ் மக்களே,

​தமிழ் மக்கள் பேரவையால் எதிர்வரும் 16ம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் – 2019 வரலாற்று நிகழ்வுக்கு தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை கடந்த கால எழுக தமிழ் நிகழ்வுகளுக்கு பூரணமான ஆதரவை வழங்கியது போல் இம்முறையும் பலமான ஆதரவை வழங்க உத்தேசித்துள்ளதுடன் வடகிழக்கு தமிழர் தாயக தமிழ் மக்கள் அனைவரையும் இவ் நிகழ்வில் கலந்து உங்கள் ஒவ்வொருவரினதும் தமிழ் தேசிய வரலாற்று தார்மீக உரிமையை நிலைநாட்டுமாறு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை பகிரங்க அழைப்பை ஏற்படுத்துகின்றோம்.

​எமது தேசிய தலைவர் மேதகு திரு.வே.பிரபாகரன் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் ஈழத்திற்கான ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டு இன்று ஒரு தசாப்தத்தை கடந்துள்ள நிலையில் சிறிலங்கா சிங்கள, பௌத்த இனவாத அரசினால் இன்றுவரை தமிழ் மக்களுக்கு எவ்விதமான ஒரு தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ஆனால் கடந்த 10 வருடங்களில் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச ஒரு தீர்வையேனும் வழங்குவேன் என்று தமிழ் மக்களிடமும், சர்வதேசத்திடமும் கூறிக்கொண்டு ஆட்சி பீடமேறிய ஜனாதிபதிகளும் எதையுமே செய்யவில்லை இனிமேல் செய்யப் போவதும் இல்லை. தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாறாக இவர்கள் செய்தது யாதெனில் இலங்கை வனபரிபாலனத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம், மகாவலி அதிகார சபை போன்றவற்றின் ஊடாக தமிழ் பகுதிகளில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள், அத்துமீறிய பௌத்த விகாரைகள் நிறுவுதல், எமது சொந்த நிலங்களை சூறையாடுதல், எமது தொல்லியல் வரலாற்று சின்னங்களையும் மதத் தலங்களையும் அழித்தல் போன்ற செயற்பாடுகளையே மும்முரமாக செய்துள்ளனர்.

​இந்த பௌத்த, சிங்கள பேரினவாத ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசு இதுவரை எம் தமிழ் மக்கள் தம் நியாயமான உரிமைகளுக்கான எத்தனை உரிமை போராட்டங்களை வடகிழக்கு தாயகத்தில் இன்றுவரை தன்னெழுச்சியாக முன்னெடுத்து வருகின்ற போதும் இந்த பேரினவாத அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் நல்லாட்சி என்று மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்துகின்றனர்.
​கடந்த 2015ம் ஆண்டில் தமிழ் மக்களின் வாக்குகளால் ஆட்சி அமைத்த மைத்திரி, ரணில் என்னும் கூட்டு நல்லாட்சி அரசு முதல் 100 நாள் திட்டத்தில் தமிழ் மக்கள் நலன்களில் எவ்விதமான கரிசனையும் காட்டாமல் தொடர்ந்தும் முன்னைய ஆட்சியாளர்களை போல ஏமாற்றத் தொடங்கின. இவர்களின் நல்லாட்சி என்னும் கூட்டுக்குள் வசமாகபோய் மாட்டிக் கொண்ட எமது பிரதான தமிழ் கட்சிகளும் எமது மக்களுக்கான அடிப்படை தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியாமல் இன்று எம் மக்களுக்கு பதில் கூறவும் முடியாமல் திணறுகின்றார்கள். அது மட்டுமா இந்த அரசு எங்களை ஏமாற்றுகின்றது என்ற சந்தேகம் வருகின்றது என்று எம் தலைவர்கள் இன்று கூறுகின்றார்கள்.

​இது போன்ற நிலைமைகளால் தான் இன்று எம்மக்கள் தாமாகவே பல போராட்டங்களை தமிழர் தாயகத்தில் முன்னெடுத்து வருகின்றார்கள். கேப்பாப்புலவு காணி விடுவிப்பு போராட்டத்தில் தொடங்கி காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கான போராட்டம், நீராவியடி பிள்ளையார் பகுதி பௌத்த விகாரை எதிர்ப்புப் போராட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்துவதற்கான போராட்டம், வடகிழக்கு வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம் வரை முடிவேதுவுமில்லாமல் தொடர்கின்ற நிலைமையே அன்று போல் இன்றும் நிகழ்கின்றது.

​இவ்வாறு இன்று எமது தாயக மக்கள் எதிர்நோக்கியுள்ள அனைத்து பிரச்சினைகளையும் எமது எதிர்கால அரசியல் திட்டங்களுக்கு ஊடாகவும் சர்வதேசத்தின் ஆதரவுகள் மற்றும் இலங்கை அரசு மீதான அழுத்தங்களுக்கு ஊடாகவும் எமது போராட்ட மக்களுக்கு பெற்று கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 16.09.2019 திங்கட்கிழமை காலை 09.00மணிக்கு யாழ் முற்றவெளியில் இவ் எழுக தமிழ் நிகழ்வை தமிழ் மக்கள் பேரவை ஒழுங்குபடுத்தியுள்ளது. ஆகவே இவ்வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு அனைத்து மக்களும், அனைத்து கட்சிகளும், பல்கலைக்கழகம் உட்பட ஏனைய கல்விசார் நிறுவனங்களும், வர்த்தக சங்கங்களும் ஏனைய பொது அமைப்புக்களும் தங்களது பூரண ஆதரவுகளை வழங்கி எமது தார்மீக கடமையை நிறைவேற்ற ஒன்றிணைவோமாக……


க.ஜெனனன்
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை

Leave A Reply

Your email address will not be published.