டொரியன் புயல் காரணமாக கனடா இருளில் மூழ்கியது!

0

கரீபியன் தீவுக்கு அருகே உருவான ‘டொரியன்’ புயல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பஹாமசை பதம் பார்த்தது.

இந்த புயல் அந்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. மேலும் ‘டொரியன்’ புயலுக்கு பஹாமசில் 43 பேர் பலியாகினர்.

இந்த நிலையில், கனடாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நோவா ஸ்காட்டியா மாகாணத்தின் ஹெலிபேக்ஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு ‘டொரியன்’ புயல் கரையைக் கடந்தது.

அப்போது மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலையில் இருந்த மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கிவீசப்பட்டன.

புயலின் போது, கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சுமார் 20 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பின.

புயலை தொடர்ந்து, கனமழை கொட்டித்தீர்த்தது. புயல் தாக்கிய சில மணி நேரத்தில் மட்டும் 100 மில்லிமீட்டர் அளவு மழை பெய்ததாக கனடா வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதற்கிடையில் புயல் காரணமாக ஹெலிபேக்ஸ் நகரில் பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. எனினும் ‘டொரியன்’ புயலால் கனடாவில் உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ அல்லது யாரும் காயம் அடைந்ததாகவோ இதுவரை தகவல்கள் இல்லை.

அதே சமயம் புயல், மழை காரணமாக ஹெலிபேக்ஸ் நகரில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.