திண்டுக்கலில் கார்த்தி; கொடைக்கானலில் கீர்த்தி – இரண்டு படங்களின் அப்டேட்ஸ்!

0

கார்த்தி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் படங்களின் அப்டேட்ஸ்!

கார்த்தி – கீர்த்தி சுரேஷ்

`கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, கார்த்தி நடிப்பில் வெளியான `தேவ்’ படத்திற்கு வரவேற்பு எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை. அதனால், கார்த்தியின் அடுத்த படமான `கைதி’யின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்தப் படம் தீபாவளியன்று `பிகில்’ படத்தோடு வெளியாகவிருக்கிறது. தற்போது, `ரெமோ’ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார், கார்த்தி.

கார்த்தி
கார்த்தி

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இது அவருக்கு முதல் தமிழ்ப் படம். திண்டுக்கலில் தீவிரமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் நெப்போலியன் சமீபத்தில் இணைந்துள்ளார். கார்த்தியின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். `சீமராஜா’ படத்திற்குப் பிறகு, தமிழில் நெப்போலியன் நடிக்கும் படம் இது.

`மகாநடி’ படத்திற்குப் பிறகு, கீர்த்தி சுரேஷிற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், இனி வழக்கமான கேரக்டர்களில் நடிக்காமல் தான் நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருகிறார். நீண்ட நாள்கள் எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்தவர், பாலிவுட்டில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்திய கால்பந்து வீரரான சையது முகமது இப்ராஹிமின் பயோபிக்காக உருவாகிவரும் இப்படத்திற்கு `மெய்டான்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதில் அவரது மனைவியாக நடிக்கிறார், கீர்த்தி.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

தமிழில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் படமொன்றில் ஒப்பந்தமானார். இதை அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் என்பவர் இயக்குகிறார். ஹீரோயின் சென்ட்ரிக் கதையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கொடைக்கானலில் ஆரம்பிக்கப்பட்டது. தவிர, மலையாளத்தில் `அரபிக்கடலிண்டே சிம்ஹம்’, தெலுங்கில் `மிஸ்.இந்தியா’ ஆகிய படங்கள் கீர்த்தியின் கைவசம் உள்ளன

Leave A Reply

Your email address will not be published.