திரவம் வற்றி பாலையான சரீரத்தில்
பற்றியெரிந்தது சுதந்திரச் சுவாலை
மறுபடியும் நாவு தன் நாதத்தில்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் மலரட்டுமென
உச்சரித்து ஆடியது
திவலைகள் எங்கும் சோகத்தைப் பாட
நல்லூரின் முன்றலில்
இலட்சியத் தீயாய் சுவாலித்தது
பார்த்தீபக் குரிசில்
கடலாகிச் சனம் நிறைய
சரித்திரத்தை மாற்றும்பிள்ளை
பசியுடன் யாகம் இறைத்தது
கோரிக்கைகள் நிறைந்தது
கொந்தளித்தது தாயவர் உளம்
ஈழ ஆதவத்தின் வழியே
பெரு வேள்வியாய் நீண்ட
பிள்ளை தன் உடையுண்ட குரலினால்
ஈழத்தை வரைந்தது
நீதி மறுக்கப்பட்ட மண்ணில்
அநீதி சிம்மாசனம் அலங்கரித்த மண்ணில்
இந்தியம் வஞ்சித்த மண்ணில்
அகிம்சையை போதித்த மண்ணில்
அகிம்சையில் ஆதிவேராய் விழுதெறிந்து
மடிந்து கொண்டிருந்தது பார்த்தீபப் பறவை
இன்றும் தன் சிறகை
விரித்தபடி
பசித்தபடி
அழுது கொண்டேயிருக்கிறான் பார்த்தீபன்
என்று காணுமோ
மக்கள் புரட்சி
கவிஞர். த. செல்வா