அமெரிக்காவில் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட நாய்க்குட்டி

0

அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள எனிட் நகரத்தை சேர்ந்த பெண் டீனா ஸ்ப்ரிங்கர் (வயது 44). இவரது நண்பர் பிரெண்ட் பார்க்ஸ் (79). கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் காரில் பயணம் செய்தனர். பிரெண்ட் பார்க்ஸ் தனது செல்லப்பிராணியான லேப்ரடார் இன நாய்க்குட்டியையும் காரில் அழைத்து சென்றார்.

டீனா காரை ஓட்டினார். பிரெண்ட் பார்க்ஸ் அவருக்கு அருகில் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது நாய்க்குட்டி மட்டும் பின் இருக்கையில் இருந்தது. அமெரிக்காவில் தனிநபர்கள் தங்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்து கொள்வது வழக்கம். அந்த வகையில் டீனா குண்டுகள் நிரப்பப்பட்ட கைதுப்பாக்கியை காரின் முன்பக்க இருக்கைகளுக்கு இடையில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் ரெயில்வே கேட் ஒன்றில் ரெயில் செல்வதற்காக டீனா காரை நிறுத்தினார். அப்போது கடந்து சென்ற ரெயில் எழுப்பிய சத்தத்தினால் காரில் இருந்த நாய்க்குட்டி அதிர்ந்து துள்ளி குதித்தது. இதில் எதிர்பாராத விதமாக முன்பக்கம் உள்ள துப்பாக்கியின் மேல் நாய்க்குட்டி விழுந்தது. இதனால் துப்பாக்கி விசை அழுத்தப்பட்டு, டீனாவின் தொடையில் குண்டு பாய்ந்தது.

டீனா வலியால் அலறி துடித்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்தி சம்பவத்தை உறுதி செய்த போலீசார், துப்பாக்கி போன்ற அபாயகரமான ஆயுதங்களை கையாளுவதில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.