இலண்டனில் சிக்கலில் மாறியுள்ள உபெர் கார் சேவை!

0

உலகம் முழுவதும் வாடகை கார்களை இயக்கிவரும் உபர் நிறுவனம் பயணிகள் பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்த தவறிவிட்டதாக பேருந்து, வாடகை கார்கள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி அளித்து, கண்காணிக்கும் லண்டன் நகர போக்குவரத்து நிர்வாகத்துக்கு அடிக்கடி புகார்கள் வந்தன.

லண்டனில் 15 மாதங்களுக்கு வாடகை கார்களை இயக்குவதற்கு முன்னர் உரிமம் பெற்றிருந்த உபேர் நிறுவனம் கார்களுக்கான இன்சூரன்ஸ் தவணையை கட்டாமல் கார்களை இயக்கியதுடன் முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர்களை ஆள்மாறாட்டம் செய்து டிரைவர்களாக பணியமர்த்தி இருந்தது மேற்படி புகார்கள் தொடர்பான விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதைதொடர்ந்து, 15 மாதகால உரிமம் காலாவதியான பின்னர் உரிமத்தை புதுப்பிக்க லண்டன் நகர போக்குவரத்து நிர்வாகத்திடம் உபர் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்தி இனி புகார்கள் வராதவாறு தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பழைய உரிமத்துக்கான 2 மாதகால நீட்டிப்பு மட்டும் கடந்த செப்டம்பர் மாதத்தில் அளிக்கப்பட்டது.

அந்தக் காலக்கெடு முடிவடைந்த நிலையில் உபர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க லண்டன் போக்குவரத்து நிர்வாகத்தில் தற்போது மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை சுமார் 14 ஆயிரம் முறை தவறுகளை இழைத்துள்ள உபேர் நிறுவனத்துக்கு இனி உரிமம் அளிக்கப்பட மாட்டாது என லண்டன் போக்குவரத்து நிர்வாகத்தின் இயக்குனர் ஹெலென் சேப்மேன் இன்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

’நிபந்தனைக்கு பின்னர் பழைய குறைபாடுகளை நிவர்த்திக்க உபர் நிறுவனம் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் கருத்தில் கொள்ளத்தக்கவை. எனினும், அந்த தவறுகள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாது என்று நம்புவதற்கில்லை.

எனவே, லண்டன் மக்களின் பாதுகாப்பை பிரதானமாக கருதி உரிமத்தை மீண்டும் புதுப்பிப்பதற்கில்லை’ எனவும் ஹெலென் சேப்மேன் குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவுக்கு லண்டன் நகர மேயர் சாதிக் கான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்த முடிவுக்கு எதிராக முறையீடு செய்ய உபர் நிறுவனத்துக்கு 21 நாட்கள் அவகாசம் உண்டு. அதுவரை லண்டனில் அந்நிறுவனத்தின் கார்கள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.