ஈராக் மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி!

0

ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

கடந்த மாதம் 1-ந் திகதி தொடங்கி நடந்து வரும் இந்த தொடர் போராட்டத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு இதுவரை முறையாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், தலைநகர் பாக்தாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருக்கும் கர்பாலா நகரில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகத்தின் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்பாலா நகர் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், ஈரான் தூதரகம் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழங்கினர்.

அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் தூதரகத்தின் நுழைவாயிலில் டயர்களை தீவைத்து கொளுத்தினர்.

மேலும் தூதரகத்தின் சுற்று சுவர் மீது கற்களையும், வெடி பொருட்களையும் வீசி எறிந்தனர். இதையடுத்து போராட்டக்காரர்களை விரட்டியடிக்க பாதுகாப்பு படைவீரர்கள் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.

ஆனாலும் நிலைமை கட்டுக்குள் வராததால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் போராட்டக்காரர்கள் 5 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே பாக்தாத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பசுமை மண்டலம் பகுதிக்கு செல்லும் மேம்பாலத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு போக்குவரத்தை முடக்கினர்.

Leave A Reply

Your email address will not be published.