பிரிட்டன் தூதரக பெண் அதிகாரியை வன்புணர்ந்து கொன்ற உபேர் சாரதிக்கு மரண தண்டனை!

0

பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் ரெபேக்கா டைக்ஸ்(30). சிறுமியாக இருந்தபோது ஹாங்காங் நகரில் உள்ள ஒரு சீனப்பள்ளியில் ஆரம்பக்கல்வியை முடித்த ரெபேக்கா, பின்னர் தாய்நாட்டுக்கு திரும்பி மான்செஸ்ட்டர் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் படிப்பில் இளநிலை பட்டதாரி ஆனார்.

பின்னர், லண்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஆட்சியியல் முறைகள் தொடர்பான பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றார்.

2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் லெபனான் தலைநகர் பெய்ருட்டில் உள்ள பிரிட்டன் நாட்டு தூதரகத்தில் அனைத்துலக மேம்பாட்டுப் பிரிவில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.

எல்லோரிடமும் அன்பாகப் பேசும் பெண்ணான ரெபேக்கா நாளடைவில் பெய்ருட்டில் தனது நட்பு வட்டத்தை வளர்த்துக் கொண்டிருந்தார்.

அந்த ஆண்டின் இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பிரிட்டனுக்குச் சென்று தனது குடும்பத்தினரைப் பார்க்க திட்டமிட்டிருந்த ரெபேக்கா, முன்னதாக, 15-12-2017 அன்றிரவு நண்பர்களுடன் கேளிக்கை விடுதிக்குச் சென்று நன்றாக ஆடி பாடி கொண்டாட விரும்பினார்.

பெய்ருட் அருகேயுள்ள கெமாய்ஸ் என்ற இடத்தில் உள்ள கேளிக்கை விடுதிக்குச் சென்று இரவு முழுவதும், நண்பர்களுடன் ஆடி பாடி மகிழ்ந்துவிட்டு, வீடு திரும்ப உபேர் வாடகை காரை அழைத்தார்.

ரெபேக்காவை ஏற்றிய சில நிமிடங்களிலேயே காரை அருகேயுள்ள மலைப்பாதையில் ஓட்டிச் சென்ற அந்த 35 வயது கார் டிரைவர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ரெபேக்காவை பாலியல் ரீதியில் வன்புணர்வு செய்தான்.

ரெபேக்கா கழுத்தில் கயிறை இறுக்கிக் கொன்றதுடன் அவரது பிணத்தை மெட்டென் நெடுஞ்சாலையோரத்தில் தூக்கி வீசிச் சென்றான்.

மறுநாள் 16-ம் திகதி காலை அவ்வழியாக சென்றவர்கள் சாலையோரம் பெண் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டறிந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

முதலில் சடலத்தை வைத்து யாரென்று அடையாளம் கண்டறிய இயலாத போலீசார், பின்னர் உள்ளூர் ஓவியர்களை வைத்து சடலத்தின் முகத்தைப் படம் வரைய வைத்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பிய போது தான் இறந்தது தூதரக அதிகாரி ரெபேக்கா என்ற விவரம் தெரியவந்தது.

அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் ரெபேக்காவை கற்பழித்துக் கொன்ற குற்றத்துக்காக லெபனானைச் சேர்ந்த அந்த உபேர் கார் டிரைவர் டரேக் ஹவுஷியே என்பவனை கைது செய்தனர்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் லெபனானில் உபேர் காரை பயன்படுத்துவதை பெண்கள் தவிர்க்க ஆரம்பித்தனர். அந்நாட்டு உள்துறை மந்திரியும் இதை ஆதரித்திருந்தார்.

ஏற்கனவே போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு, வாகனங்கள் திருடிய வழக்கு ஆகியவற்றில் சிக்கி இருந்த ஹவுஷியே(29) மீது பெய்ருட்டில் உள்ள நீதிமன்றத்தில் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கை போலீசார் தொடர்ந்திருந்தனர்.

இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் நிறைவடைந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி உபேர் வாடகை கார் டிரைவரான டரேக் ஹவுஷியே-வுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

லெபனான் நாட்டில் கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட கொடுங்குற்றங்களுக்கு நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து எந்த குற்றவாளிக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.