இப்போது தமிழ் மக்களை ஏமாற்றுவது சிங்கள அரசல்ல தமிழ் தலைமைகளே?

0

ஈழத் தமிழ் மக்கள் வரலாறு முழுவதும் சிங்கள அரசினாலும் சிங்கள அரச தலைவர்களினாலும் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். ஒப்பந்தங்களைச் செய்து, வாக்குறுதிகளை அளித்து தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு ஒன்றை முன் வைப்பதாக கூறி, தமிழ் மக்களை சிங்கள அரசுகள் ஏமாற்றி வந்துள்ளன.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை – இன அழிப்புப் போரை ஆரம்பிக்கின்ற போது தமிழ் மக்களுக்கு ஜனநாயக ரீதியான தீர்வு ஒன்றினை முன் வைப்பதாக கூறியே போரை நடத்தி முடித்தார். எனினும் போர் முடிந்து ஐந்து வருடங்களான போதும் மஹிந்த ராஜபக்ச எந்த ஒரு தீர்வையும் வழங்கவில்லை. மாறாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவர் தீர்வாக கொண்டிருந்தார்.

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மஹிந்த ராஜபக்ச தரப்பினர் தயங்கினர். தமிழீழ விடுதலைப் புலிகளால் நிராகரிக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்கள் இப்போது ஏன் கேட்கின்றனர் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் கோருகின்றனர் என்றும் கோத்தபாய ராஜபக்ச முன்னர் ஒருமுறை பேசியிருந்தார்.

சம்பந்தன் புலிகள்க்கான பட முடிவுகள்"

குறைந்தபட்சம் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்குமாறு தமிழர்களின் தரப்பினால் கோரப்பட்டது. அத்துடன் சில சிங்கள தலைவர்களும் சிங்கள மக்களும் ஊடகங்களும் புத்திஜீவிகளும் கூட இத்தகைய கோரிக்கையினை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தனர்.

மஹிந்த ராஜபக்ச தரப்பினரைப் பொறுத்த வரையில் தமிழீழ மக்களை அழித்து ஒளிப்பதையே இனப்பிரச்சினைக்கான தீர்வாக கொண்டிருந்தனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த ஒரு தீர்வையும் வழங்காமல் காலத்தை இழுத்தடித்து தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவது தான் சிங்கள அரசின் நோக்கம் என்று 2008 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கூறியிருந்தார்.

சிங்கள அரசின் போக்கு தொடர்ச்சியாக அவ்வாறே காணப்பட்டு வந்துள்ளது. 2009க்கு முன்னரான காலத்திலும் சரி 2009 இற்குப் பின்னரான காலத்திலும் சரி மஹிந்த ராஜபக்சவின் உடைய காலத்திலும் சரி மைத்திரிபால சிறிசேன ரணில் அரசாங்கத்தினுடைய காலத்திலும் சரி தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வந்து மாற்றப்படுகின்றனர்.

சம்பந்தன் புலிகள்க்கான பட முடிவுகள்"

இதுபோல 2015க்கு பின்னரான காலத்தில் மைத்திரிபால சிறிசேன – ரணில் அரசாங்க காலத்தில் சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு தமிழ் தலைமைகளும் உடந்தையாகச் செயற்பட்டுள்ளன. வரும் தீபாவளிக்கு தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று இரா சம்பந்தன் அவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக கூறி தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளார்.

இன்றைய தினம் வவுனியாவில் நடந்த சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய இரா சம்பந்தன் அவர்கள் விடுதலைப் புலிகளை அழித்தமையினால் தம்மையும் ஏமாற்ற பார்க்கின்றனர் என்று இலங்கை அரசை சாடியுள்ளார். தேர்தல்கள் வந்தாலே விடுதலைப்புலிகளின் நினைவுகள் தமிழ்த் தலைவர்களுக்கு ஏற்படுகின்றன.

அவ்வாறு தற்போதும் தேர்தல் நேரத்தில் விடுதலைப்புலிகளின் பெயர்களை உச்சரித்து சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு கோரும் செயற்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. இதேவேளை சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி ஒளிந்து இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இன்று கூறியுள்ளார். 

சம்பந்தன் மைத்திரிக்கான பட முடிவுகள்"

கடந்த 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ரணில் அரசாங்கத்தில் தமிழ் மக்களின் தொடர்ச்சியாக ஏமாற்றி வந்த இரா சம்பந்தன் அவர்கள் தற்போது மீண்டும் சஜித் அரசாங்கத்திலும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு வேலையை ஆரம்பித்து இருக்கிறாரா என்ற சந்தேகமே எமக்கு எழுகின்றது.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி இல்லை என கூறுகின்றார் சஜித். சமஸ்டி தீர்வை வழங்குவதற்கு தாம் ஒருபோதும் தயாரில்லை என ரணில் தரப்பு தொடர்ச்சியாக கூறிவருகின்றது. மைத்திரிபால சிறிசேனவும் ஒருபோதும் சமஸ்டிக்கு இணங்கப் போவதில்லை என்று கூறி வந்தார். எனினும் இலங்கை அரசு சமஷ்டி தீர்வினை முன்வைக்கும் என்று இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ் தலைமைகள் தொடர்ச்சியாக கூறி வந்த நிலையில் தற்போது வரை எந்த ஒரு விடயமும் நடைபெறவில்லை.

சம்பந்தன் சஜித்க்கான பட முடிவுகள்"

இப்போது மீண்டும் தமிழ் மக்களுக்கு சமஸ்டியை கிடைக்கும் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி ஒளிந்துள்ளது என்று கதைகளை பேசி கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற ஒரு வேலையை தமிழ் தலைமைகள் முன்னெடுத்து வருகின்றனர். உண்மையில் தற்காலத்தில் சிங்கள அரசைவிடவும் தமிழ்த் தலைமைகளே தமிழ் மக்களை ஏமாற்றுவதைதான் இந்த அரசியல் பேச்சுக்கள் நமக்கு உணர்த்துகின்றது.

ஆசிரியர், ஈழம்நியூஸ். 09.11.2019.

Leave A Reply

Your email address will not be published.