அசுரன், பிகில், விஸ்வாசம், கைதி: போட்டி போட்டு புதுப்படங்களை ஒளிபரப்பும் டிவி சேனல்கள்

0

சன் டிவி, விஜய் டிவி ஆகியவை பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஒளிபரப்பும் படங்கள் பற்றி விமர்சனம் எழுந்துள்ளது.

பிகில், விஸ்வாசம்

பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக டிவி சேனல்களில் புதுப்படங்கள் ஒளிபரப்பப்படுவது ஒன்றும் புது விஷயம் இல்லை. உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக என்று கூறி சன் டிவியில் வரும் புதுப்படத்தை பார்க்க பெரிய கூட்டமே உள்ளது. இந்த பொங்கலுக்கு சன் டிவியில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் படம் ஒளிபரப்பாக உள்ளது. பிகில் மட்டும் அல்ல கடந்த பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட்டான அஜித்தின் விஸ்வாசம் படத்தை வரும் 18ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள்.

நம்ம வீட்டுப் பிள்ளை

பிகில், விஸ்வாசம் மட்டும் அல்ல சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்களும் பொங்கல் ஸ்பெஷலாக சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படம் பரவாயில்லை ஆனால் பிகிலை அதற்குள் டிவியில் போடலாமாய்யா என்று விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கைதி, அசுரன்

சன் டிவி ஒரு புறம் ஹிட் படங்களை ஒளிபரப்ப விஜய் டிவி மறுபக்கம் நாங்களும் புதுப்படங்களை ஒளிபரப்புவோம்ல என்று கிளம்பியுள்ளது. கடந்த தீபாவளிக்கு பிகிலுடன் சேர்ந்து வந்த கார்த்தியின் கைதி படத்தை ஒளிபரப்புகிறது விஜய் டிவி. கைதியை விடுங்கய்யா தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அசுரன், விஷாலின் ஆக்ஷன், சமந்தாவின் ஓ பேபி, யோகி பாபுவின் பெட்ரோமாக்ஸ் ஆகிய படங்களும் ஒளிபரப்பாகின்றன.

தமிழ் ராக்கர்ஸா?

பொங்கலுக்கு சன் டிவியும், விஜய் டிவியும் போட்டி போட்டு படங்களை ஒளிபரப்புவதை பார்ப்பவர்கள் இது என்ன டிவி சேனல்களா இல்லை தமிழ் ராக்கர்ஸா என்று சந்தேகமாக இருப்பதாக கூறியுள்ளனர். டிஜிட்டல் தளங்களில் புதுப்படங்கள் வந்துவிடுவதால் அதை டிவி சேனலில் ஒளிபரப்புவதில் தவறு இல்லை என்கிறார்கள் சிலர். புதுப்படங்களை அவங்க ஒளிபரப்பலாம் ஆனால் அதை பார்க்க மின் வாரியம் ஒத்துழைப்பு அளிக்கணுமே என்பது தான் பலரின் கவலை. டிவியில் எப்பொழுது புதுப்படம் போட்டாலும் மின்வெட்டு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.