உடனடியாக எனக்கு உறுதிப்படுத்துங்கள்! கோட்டாபய வழங்கியுள்ள கட்டளை

0

சலுகையின் நன்மைகளை நுகர்வோருக்கும் பொதுமக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதனை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கட்டளையிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு பொது மக்கள் அனுப்பிய முறைப்பாடுகளை அடுத்தே ஜனாதிபதி இந்த ஆணையை அதிகாரிகளுக்கு பிறப்பத்திருக்கிறார்.

குறிப்பாக, கடந்த 2019 டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், குறிப்பாக சில்லறை, தொகை மற்றும் இறக்குமதி பொருட்கள் விற்பனையின் போது வற் வரி குறைக்கப்பட்டதனால் கிடைக்கப்பெறும் நன்மைகள் நுகர்வோரை சென்றடைவதில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக ஜனாதிபதி செயலகத்திற்கு முறைப்பாடுகள் அனுப்பட்டு வருகின்றன.

இந்நிலைமையை முறையாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நுகர்வோர் அதிகார சபைக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“வரிச் சலுகையின் நன்மைகளை நுகர்வோருக்கும் பொதுமக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதனை உறுதிப்படுத்துமாறு இறக்குமதியாளர்கள், தொகை மற்றும் சில்லறை வியாபாரிகள் உள்ளிட்ட வர்த்தக சமூகத்தினருக்கும் இதனை உறுதிப்படுத்த வேண்டும்.

அனைத்து மக்களினதும் நலன்கருதி போட்டித்தன்மைமிக்க வர்த்தக நடைமுறைக்கு மதிப்பளித்து செயற்படுமாறும் ஊடகக் கலந்துரையாடல்கள் அல்லது வேறு தொடர்பாடல் முறைகளினூடாக மக்களுக்கு அதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.

போட்டித்தன்மையற்ற சந்தை முறைகளுக்கு இடமளிக்காமையை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து கொள்கை ரீதியான தீர்மானங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குறிப்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு பாரிய அளவிலான இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பாரிய அளவிலான விநியோகஸ்தர்கள் மீது தங்கியிருக்கும் சில்லறை வியாபாரிகள் தொடர்பில் முறையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கடுமையாக ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.