சாதி, பிரதேசவாத அரசியலை நிறுத்துங்கள் – சிறீதரனுக்கு பகிரங்க மடல்

0

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு,

தங்களால் நடாத்தப்படும் இணைய ஊடகம் ஒன்றில் பிரதேச வாதம் மற்றும் சாதியத்தை கிண்டி, வளர்த்து அரசியல் செய்யும் வகையிலான கட்டுரை ஒன்றை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம். இனவிடுதலையுடன் சமூக விடுதலைக்காகவும் களத்தில் பல்வேறு தியாகங்களையும் மாற்றங்களையும் உருவாக்கிய ஈழ மண்ணில் நின்று கொண்டு இவ்வாறு சாதியத்தையும் பிரதேச வாதத்தையும் தூண்டி அதில் அரசியல் இலாபம் தேடுகின்ற அநாகரிக செயல் உங்களை உறுத்தவில்லையா? பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கின்றது. பேரதிர்ச்சிக்கும் சீற்றத்திற்கும் உள்ளாக்கின்றது.

கிளிநொச்சியில் சில சந்திப்புக்களை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உங்களது கட்சியை சேர்ந்தவர்தானே? நீங்கள் அனைவரும் ஒரு கட்சியில் இணைந்து பயணித்து அரசியல் செய்து கொண்டிருக்கையில், உங்கள் கட்சியில் உள்ள அடிநிலைத் தொண்டர்களும் பிரதேச சபை உறுப்பினர்களும் சுமந்திரனை சந்திப்பது எப்படி துரோகம் ஆகும்? தட்டி கேட்பவர்களையும் விமர்சிப்பவர்களையும் துரோகி ஆக்கி வந்த நீங்கள் இப்போது உங்கள் கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினரையே துரோகி ஆக்குவது எப்படி நியாயமானது? இப்பிடியெல்லாம் செய்து மக்களுக்கு துரோகம் செய்வது யார்?

தாங்கள், ஏற்கனவே இரணைமடு தண்ணீர் திட்டத்தின்போது யாழ் கிளிநொச்சி மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சித்தீர்கள். ஆனால் நெடுந்தீவுக்கு போனால், நெடுந்தீவு எனது ஊர் சொந்தம் என்பதும், வறணிக்கு போனால் வறணி எனது ஊர் எனது சாதி என்பதும், வட்டக்கச்சிக்கு போனால் வட்டக்கச்சி எனது பிறப்பிடம் என் சாதி என்பதுமாக பேசுவதுடன் என்ன இருந்தாலும் என்ட சாதிக்காரன் என்னை கைவிடமாட்டான் என்று வெளிப்படையாக சாதியம் பேசி மக்களிடம் வாக்கு கேட்பதும் வங்குறோத்து தனமான அரசியல் அல்லவா?

தற்போதும் அத்தகையதொரு அசிங்கத்தை உங்களால் நடாத்தப்படும் இணையத்திலும், உங்களது விசுவாசிகளின் வாயிலாகவும் பரப்பி வருகிறீர்கள். ஏற்கனவே மலையக மக்களை இழிவாக பேசியதுடன், மலையக சமூகத்தை சார்ந்தவர்களை, உங்கள் அரசியலுக்காக கறிவேப்பிலையாக பாவித்துவிட்டு தூக்கி எறிந்ததும் யாவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாகவே திரு ப. குமாரசிங்கம் மீது தங்களின் சாதிய, பிரதேச வாத காழ்ப்புணர்வை கொட்டி பழி தீர்த்துள்ளீர்கள். அவருக்கு எதற்காக உரிய அங்கீகாரம் வழங்காமல் ஒதுக்கினீர்கள் என்பதையும் அதற்கான அடிப்படையாக சாதி மேலாதிக்கம்தான் இருந்தது என்பதையும் தற்போதைய உங்கள் அணுகுமுறை உணர்த்தி விட்டது.

எமது இனம் 2009இற்கு பின்னர் துண்டு துண்டாக சிதைக்கப்படுகின்றது. எமது இனத்தை அழிப்பதற்கு இப்போது எதிரிகள் தேவையில்லை. உங்களைப் போன்றவர்களே போதும், தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக பதவி வெறிக்காக எதையும் தாங்கள் செய்வீர்கள். சாதிப் பெயர் சொல்லி பெருமை தேடுவதும், பிரதேச வாதத்தை தூண்டி அரசியல் செய்வதும், சாதி பிரதேச வாதம் பார்த்து மக்களை ஒதுக்கி அடக்குவதும் இலங்கை அரசின் இன அழிப்பு செயல்களைவிடவும் பன்மடங்கு எமது இனத்தை அழித்து ஒழிக்கக்கூடியது. அரசும் அரச படைகளும் செய்ய வேண்டிய வேலையை தாங்கள் கட்சிதமாக செய்து வருகிறீர்கள்.

தங்களின் இத்தகைய ஈனச் செயல்களுக்கு எதிர்வரும் காலத்தில் மக்கள் தக்க பதிலடியை வழங்குவார்கள். தாங்கள் அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பதே எமது இனத்திற்கு செய்யும் பேருதவியாக அமையும். பல்வேறு இழப்புக்களை சந்தித்து, மீண்டு எழுந்து வரும் தமிழ் இனத்தை, உங்களது அற்பத்தனமான அரசியலுக்காக பிரித்தாடி மகிழாதீர்கள். இது மாவீரர்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம் என்பதை மறவாதீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.