பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குக!

0

நாட்டில் வேலைவாய்ப்பின்மை  பாரிய நெருக்கடியாக உருவெடுத்து வருகின்றது. படித்துப் பட்டம் பெற்ற ஒருவர் வேலை ஒன்றை பெற்றுக் கொள்ள குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் செல்கின்றது.

குறிப்பாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி அனுமதிக்காக இரண்டு வருடம், படித்து பட்டம் பெற  நான்கு வருடம், வேலை தேட நான்கு வருடம் என வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.

அதுவும் பல்கலைக்கழகங்கள் சரியாக இயங்கவில்லையானால் மேலும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். இந்நிலையில் மாணவன் நடுத்தர வயதைத் தாண்டி விடுகிறான்.

விசேடமாக வடக்கில் நிலவிய யுத்தம் கல்வியை மாத்திரமல்ல படித்துப் பட்டம் பெற்ற மாணவர்களையும்  வெகுவாகப் பாதித்துள்ளது. பட்டம் பெற்ற பலர் இன்று பொருத்தமான வேலை வாய்ப்பின்றிக் கூலி வேலை செய்யும் நிலைக்கு சென்றுள்ளனர்.

தனியார் துறைகளில் வேலை செய்து வந்த பலரின் வேலையையும் , இன்று சீனாவில் உற்பத்தியான கொடிய கொரோனா வைரஸ் பறித்து விட்டது.

பல்வேறு தனியார் நிறுவனங்களும் மாதக்கணக்கில் மூடப்பட்டதால் நஷ்டமடைந்து தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.    இதனால் இன்று இளைஞர்கள் பலர் இருந்ததையும் இழந்த  நிலைக்குச்  சென்றுள்ளனர்.

 இதனிடையே அரசாங்கம் அண்மையில் பட்டதாரிகள் நியமனம் மற்றும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என புதிய திட்டங்களை முன்வைத்தது. இதில் பட்டதாரி நியமனங்களில் தெரிவான பலருக்கு வேலை வாய்ப்பு கிட்டவில்லை. எனவும் அவர்களில் பலர் பின்னர் உள்வாங்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

 கடந்த ஆட்சியின் போது அவசர அவசரமாக ஒரு சிலருக்கு இறுதிநேரத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டன. அதுவும் பின்னர் கைவிடப்பட்டது .நியமனங்கள் பெற்றவர் நிறுத்தப்பட்டனர். 

இவ்வாறு படித்து பட்டம் பெற்றவர்கள் மற்றும் உயர் தரக்கல்வியை நிறைவு செய்தவர்கள், தொழில் பயிற்சி பெற்றவர்கள் என பலதரப்பட்டவர்கள் தொழில் வாய்ப்பின்றி பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதனால் அவர்கள் ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொள்ளக் கூட முடியாத நிலை தோன்றியுள்ளது.  இன்று பாவப்பட்டவர்களாக  பட்டதாரிகள் உள்ளனர்.

 இதேவேளை வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

ஜனாதிபதி அறிவித்த பத்தாயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம், இன்னும் வழங்கப்படாமல் உள்ளதை எதிர்த்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இன்னும் அவை பரிசீலிக்கப்படாமல் இருப்பதாகவும் 10 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களை உடன் வழங்குமாறும் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகளை கால தாமதமின்றி நிறைவேற்ற முன்வரவேண்டும். கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பி மக்கள் பெரும்பான்மை வாக்குகளால் இந்த அரசை தெரிவு செய்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகள் காணல் நீராகக் கூடாது.

ஆசிரியர்

Leave A Reply

Your email address will not be published.