ஈழத் தமிழருக்கு அரணாக இந்தியா இருக்குமா?

0

அரசாங்கம் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் முனைப்பாக இருந்துவரும் நிலையில் 13 ஆவது திருத்தத்துக்கு என்னவாகும் ? மாகாண சபை முறைமை நீக்கப்படுமா ? என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் 13 ஆவது திருத்தத்தை இலங்கையில் அறிமுகம் செய்த இந்தியாவே அதனை பாதுகாக்க வேண்டும்.

13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வோம் என்று முன்னர் பிரதமர்  மகிந்த ராஜபக்சவினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறும் வகையில் தற்போது இலங்கை செயற்பட்டு வருகின்றது.

 எனவே அது தொடர்பில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

 இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி மீண்டும் தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் 13 ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களின் எதிர்பார்ப்பான சமத்துவம் நீதி சமாதானம் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கையின் புதிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்பதே இந்திய பிரதமரின் கோரிக்கையாகும்.

 அத்துடன்  அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சனிக்கிழமை இணையவழி இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்திய வீடமைப்புத் திட்டம் பிற அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் யாழ்ப்பாணக் கலாசார நிலையம் என்பன தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

 இதேவேளை குறித்த கலாசார நிலையத்தை திறந்து வைப்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வர வேண்டும் என்ற அழைப்பையும் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ளார். அதற்கு பிரதமர் மோடி இணக்கம் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தித் திட்டங்களின் அடுத்த கட்டமாக சமூக அபிவிருத்தி வசதிகளை விஸ்தரிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் மேலும் ஐந்து வருடங்கள் அதனை நீடிப்பது தொடர்பிலும் இரு தலைவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது  குறித்தும் இணக்கம் காணப்பட்டது.

 இந்திய கடனுதவி இந்தியப் பொருட்கள் சிலவற்றுக்கான தடை நீக்கம் தமிழர்களின் எதிர்பார்ப்பு, மீனவர் பிரச்சினை என அனைத்து விவகாரங்களும் ஆராயப்பட்டுள்ளன.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைந்து வரும் நிலையிலும் புதிய அரசியலமைப்பு திருத்தச்சட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையிலும் 

பிரதமர் மோடிக்கும் மஹிந்தவுக்குமிடையிலான இணையவழி சந்திப்பும் அவர் தெரிவித்துள்ள கருத்துகளும் முக்கியமானவையாக கருதப்படுகின்றது.

இலங்கையில் தற்பொழுது உறுதியான அரசு தோன்றியுள்ளது. அடுத்து இந்தியா தனது அயல் நாடான இலங்கை தொடர்பில் கூடிய அக்கறை செலுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

சீனா எந்த ஒரு இடைவெளிக்குள்ளும்   நுழைந்து விடும் என்பதும் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் மாற்றம் அவசியம் என்பது தொடர்பிலும் அரசியல் வல்லுனர்கள் அவ்வப்போது சுட்டிக் காட்டி வருகின்றனர் .

 குறிப்பாக தமிழர் விவகாரத்தை கையில் எடுத்த இந்தியா அதனை சரியாக கையாள தவறிவிட்டது என்ற விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் தட்டிக்கழித்து விடக்கூடாது.

இலங்கை தமிழருக்கு  ஓர் பாதுகாப்பு அரணாக இந்தியா விளங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் துரதிஷ்டவசமாக ஏற்பட்ட பல்வேறு சம்பவங்கள் இலங்கைத் தமிழருக்கு மாத்திரமல்ல இந்தியாவுக்குமே அது சவாலாக மாறி விட்டது என்பதே யதார்த்தம்.

தொடர்ந்தும் இவ்வாறான தவறுகள் இடம்பெறக்கூடாது என்பதை இந்திய இராஜதந்திரிகள் உணர்ந்து கொள்ளவது அவசியம்.

Leave A Reply

Your email address will not be published.