மாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான ஏற்பாடுகளும்

0

இலங்கைத் தமிழர் வரலாற்றிலிருந்து என்றுமே அழிக்க முடியாத நாளாக கருதப்படும் மாவீரர் தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் தினதி நினைவுகூரப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்திற்கு அடுத்த நாள் மாவீரர் தினம் நினைவு கூரப்படுவது வழமை.

இலங்கையில் நீடித்து உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு உயிரிழந்த போராளிகளை நினைவு கூறும் இந்த நாளில், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு பெரும் எடுப்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

பொதுவாக மாலை 6 மணி 5 நிமிடத்திற்கு அக வணக்கதுடன் மாவீரர் தின அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகும். எனினும் அந்த வாரம் முழுவதும் அதாவது 21ஆம் திகதி முதல் 27 வரை ஆங்காங்கே நினைவேந்தல்கள் இடம்பெறும்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான போராளிகள் உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்த முதல் போராளி லெப்டினன் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதன் வீரச்சாவடைந்த நவம்பர் 27ஆம் திகதியே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிர் நீத்தவர்களின் உடல்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எதிர்த் தரப்பின் கைகளில் அகப்பட்டுவிடக்கூடாது என்பதோடு, உயிர் நீத்தவர்களை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் புதைப்பதோடு, அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு நடைமுறையை பேணி வந்தது.

1989ஆம் ஆண்டு தொடக்கம் மாவீரர் தினம் எனும் பெயருடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்த் தியாகம் செய்த போராளிகளை நினைவு கூறும் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது.

இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் முல்லைத்தீவு மணலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினமே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரை இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.

2008ம் ஆண்டு மாவீரர் தினமே தமிழீழ விடுதலைப் புலிகளால் பெரு எடுப்பில் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி மாவீரர் தினமாக அமைந்தது எனவும் கருதப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.