நினைவு கூரும் உரிமையை தடுத்தலின் கசப்பான உண்மைகள்

0

கார்த்திகை பூக்கள் மலர்ந்திடும். மானிட மனங்கள் கனத்திடும், ஏக்கங்கள் சூழ்ந்திடும். தம் அன்றாட வாழ்வியல் பொழுதுகளை கடப்பதற்காக ‘கடினமான’ மனநிலை. தத்தளித்துக் கொண்டிருக்கின்றது தாயகவாழ் தமிழினம். ஏனென்றால் இது கார்த்திகை மாதத்தின் கடைசி வாரம்.

விசேட ரோந்துகள், சந்திகள் முதல் சந்துகள் வரையில் சீருடை தரித்தவர்களின் நடமாட்டங்கள், பரிசோதனைகள், காணொளிப்பதிவுகள், அடையாளப்பதிவுகள், தலைகறுப்பைக் காட்டினாலே ஆயிரம் கேள்விக் கணைகள் என்று நிலைமைகள் வழமைக்கு மாறாக வலுவாகவே இருந்தன. 

நான்கரை ஆண்டுகள் கிடைத்ததொரு ‘வெளிக்குப்’ பின்னர் மீண்டுமொரு இருண்ட சூழல். அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் உச்ச பட்டசம். ஆனால் தமிழினத்துக்கு இதுவொன்றும் புதிதானது அல்ல. ஏனென்றால் 2015இற்கு முதல் தமிழினம் அனுபவித்ததொன்று தான். 

ஆனால், பெற்றோர்கள், உற்றார்கள், உறவினர்கள் என்று அனைத்தையும் உதறித்தள்ளி ‘விடுதலை’ என்ற இலட்சிய வேட்கையை இலக்காக கொண்டு தம்முயிர்களை ஈகம் செய்தவர்களை நினைவு கூருவதற்கான ‘கூட்டுரிமை’ இம்முறை மீண்டும் மறுதலிக்கப் பட்டிருக்கின்றது.

பள்ளி அறைகளை துறந்து ‘இனவிடுதலைக்காய்’ துயிலுமில்லங்களில் உறங்கியோர் கடந்தவொரு தாசப்பதமாக கற்குவியல்களாய் உள்ளனர். இன்னும் சிலர் அடர்ந்த காடுகளுக்குள் அடையாளமற்று விட்டனர். 

அடையாளங்கள் அழிந்தாலும், மன ஆற்றுப்படுத்தலுக்காக கற்களாகவோ, மரங்களாவோ, செடிகளாகவோ, மாண்டவர்கள் மண்ணுற்றிருக்கும் நிலத்தில் ஒருதுளி கண்ணீர் சிந்தி, சுடரேற்றி, பூசிப்பதை வழமையாக கொண்டிருந்தனர் அவர்களின் அன்புக்குரியோர். ஆனால் இம்முறை அந்த உரித்து மறுக்கப்பட்டுள்ளது.

27ஆம் திகதி வடக்கில் உள்ள அனைத்து துயிலுமில்லப் பகுதிகள் எங்கும் படைகள் குவிக்கப்பட்டன, வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டன. மணி 6.30ஐ நெருங்கியபோது, வீதிகளில்; நடமாட்டங்களே மறுக்கப்பட்டன. போர்க்கால சூழல் ஒருநொடி கண்முன் வந்து சென்றது. 

நிலைமைகள் இவ்வாறு தீவிரமடைந்திருந்தபோதும் மறவர்களுக்கான நினைவுகூரல்கள் அவர்களின் அன்புக்குரியவர்களால் தத்தமது இல்லங்களில் ‘முறையாக’ இடம்பெற்றிருக்கின்றது என்பதில் மனத்திருப்தி அடையலாம்.  

அரசியல் கனவான்களும் அடுத்தகட்ட தேர்தல் கள கோதவுக்கான அடையாளங்களை ஒளிப்படங்களாக சுடச்சுட பதிவு செய்யத் தவறவில்லை. மரணித்தவர்களின் மார்புகளில் ஏறிநின்று அரசியல் செய்வது நியாயமா? என்பதற்கான பதிலை அவ்விதமானவர்களின் மனச்சாட்சிகளே பதிலளிக்க தலைப்பட்டுள்ளது. 

இம்முறை மாவீரர்கள் நாள் நினைவு கூரலை அடியொற்றி நடைபெற்ற சில விடயங்கள் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டியது கட்டாயமாகின்றது. 

தென்னிலங்கைக்கான அரசியல் துருப்புச் சீட்டு

போர் வெற்றியால் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்தவர்கள், நான்கரை வருடகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சிங்கள, பௌத்த பெருந்தேசியவாத சக்கரங்களில் பயணித்து தற்போது ஆட்சி அதிகார அரியாசனம் ஏறியிருக்கின்றார்கள் 

அத்தகைய சிந்தனையாளர்கள் அடிப்படை உரிமைகள், சட்டங்கள், சர்வதேச சமயவாய அத்தியாங்கள் ஆகியவற்றினை அடியொற்றிச் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

தற்போது ஆட்சியாளர்கள் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து ஆண்டொன்று நிறைவடைந்திருக்கின்றது. இவர்கள் ஏற்கனவே கொழுந்துவிட்டெரிந்த தேசிய பாதுகாப்பு, சிங்கள, பௌத்த வாதம் ஆகியவற்றை கையிலெடுத்தே ஆட்சியைக் கைப்பற்றியவர்கள்;. 

ஆட்சியில் நீடிக்க வேண்டுமாக இருந்தால் கையிலெடுத்த உணர்ச்சி ரீதியான இந்த விடயங்களின் சுவாலையை எள்ளளவேனும் தணிவதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு தணிந்தால் ஆட்சியின் அடித்தளமே ஆட்டம் கண்டுவிடும் அபாயம் தான் உள்ளது.  

ஆட்சியமைத்து ஆண்டொன்று கடந்தபோதும், அவர்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சியாளர்களுக்கு, கொரோனா தாக்கம் அனைவருக்கும் பொதுவான உலக நியதியே என்று கூறி தப்பித்து விட முடியாத திரிசங்குநிலை. 

நாட்டினுள் கொரோனா ஊடுருவியபோது அதனை கட்டுக்குள் கொண்டுவந்து மார்பு தட்டியவர்கள் இதே ஆட்சியாளர்கள் தான்.  பின்னர் ‘கண்டுங்காணாத’ போக்கால் தான் தற்போதைய கையறு நிலைமை உருவாகியுள்ளது.

இதனால் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. ஆகக்குறைந்தது மன நிம்மதிக்கான நடமாட்டம் கூட கேள்விக்கு உள்ளாகியுள்ளது. 

இத்தனைக்கும் காரணம் ஆட்சியாளர்களின் கவலையீனம் மட்டுமே. இவ்விதமான குறைபாடுகளை எல்லாம் மறைத்து, தமக்கு பெருவாரியாக வாக்களித்தவர்கள் தம்மீதான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் கூடிய மனநிலையில் தக்க வைப்பதற்கான பெருந்தேவை அவர்களுக்கு உள்ளது.

அத்தேவையை நிறைவு செய்வதற்கான துருப்புச் சீட்டாகவே ‘மாவீரர்கள் நாள் நினைவு கூரலை’ அரசாங்கம் முழுமையாகப் பயன்படுத்த விளைந்தது. தற்போது அதில் வெற்றியும் கண்டுள்ளது. 

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள இந்த வெற்றி ஜெனீவா கூட்டத்தொடர் வரையில் தென்னிலங்கை அரசியல் தளத்தினை சூடாக வைத்திருப்பதற்கு போதுமானதாக இருக்கும். 

தமிழ்த் தேசிய பரீட்சையில் தேர்ந்து விட்டாரா சுமந்திரன்

அடுத்த விடயம் சுமந்திரன் என்ற தனி நபர் சார்ந்தது. 2015 பொதுத் தேர்தலில் முதற்தடவையாக களம் காண்கிறார் சுமந்திரன். வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஜுன் 29ஆம் திகதி வீரகேசரி நாளிதழில் வெளியான செவ்விக்காக அவரது யாழ்.இல்லத்தில் வைத்து இக்கட்டுரையாளர் சந்தித்திருந்தார். 

அதன்போது, “தமிழீழ விடுதலைப் புலிகளுடனான கொள்கை முரண்பாட்டாலேயே அவர்கள் காலத்தில் அழைப்புக்கள் வந்தபோதும் அரசியலில் பிரவேசித்திருக்கவில்லை” என்று பகிரங்கமாகவே கூறினார். தேர்தலில் ‘விடுதலைப் புலிகளின் கொள்கை’ எதிர்ப்பு தாக்கங்களை செலுத்தும் என்பதை நன்கறிந்தும் அவர் அஞ்சியிருக்கவில்லை. தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறினார். அத்தேர்தலில் வெற்றியும் பெற்றார்.

அத்தகையவர், பின்னாளில் பொதுமேடைகளில் அதேகருத்தை வெளிப்படுத்தி வந்தார். 2019பொது தேர்தலை அண்மித்த காலத்தில், சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில்;, ‘ஆயுத போராட்டத்தை தான் ஆதரிக்கவில்லை என்று தயங்காது’ கூறினார். அதனால் தமிழ்த் தேசியத் தளத்தில் தடம் புரண்டார். அவரது ‘தலையும்’ வெகுவாக உருண்டது. 

சுமந்திரனை சக வேட்பாளர்களே ஒதுக்கி வைக்கும் நிலையும் காணப்பட்டிருந்து. தனித்து நின்றாலும் தளராது இருந்தார். வாக்கு வீழ்ச்சியுடன் கூடிய தேர்தலில் வெற்றியைக் கூட கொண்டாட முடியாத நிலையில் தான் இருந்தார்.  அவ்வளவுக்கு அவருக்கு நெருக்கடிகள் காணப்பட்டன. 

தனது கட்சித் தலைவர், செயலாளர் ஆகியோரின் தோல்விகளால் கட்சியினுடைய வாக்குள் கைகொடுக்கவில்லை. தனி நபரை மையப்படுத்திய வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கின்றன என்பதை அவர் உணரவும் செய்தார். 

இந்தப்பின்னணிகள் தான் சுமந்திரனை ‘மென்வலு’ தமிழ்த் தேசியத்திலிருந்து ‘வன்வலு’ தமிழ்த் தேசியத்திற்குள் இயல்பாகவே தள்ளி விட்டிருக்கின்றதா? 

கடந்த பத்தாண்டுகளில் வடக்கு, கிழக்கில் அரசியல் பட்டறிவுகளால் ஏற்பட்ட ‘புரிதல்’ அவரையும் சராசரி அரசியல்வாதியாக ஆக்கி விட்டதா? 

யாழ்.மேல் நீதிமன்றத்தில் மாவீரர்கள் நாள் நினைவுகூரலை தடுக்க கூடாது என்று கோரி ‘மக்களிற்கான நீதி’ சட்டத்தரணிகள் கூட்டு தாக்கல் செய்த மனுக்களின் சார்பில் ஆஜரானார் சுமந்திரன். மாவீரர்களுக்காக அவர் ஆஜராகும் முதற் சந்தர்ப்பமும் இதுவே. 

திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற விவகாரங்களில் தலையீடுகளைச் செய்யாதவர், திடீரென இந்த மனுக்களுக்காக ஏன் ஆஜரானார்? ஒருவேளை, ‘மக்களிற்கான நீதி’ ஏற்பாட்டளரான அவர் அந்தச் சட்டத்தரணிகள் அமைப்பின் வலிந்த அழைப்பில் ஆஜராகியிருக்கலாம்.  

பின்னர் அவர், யாழ்ப்பாணம், மல்லாகம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, நீதிவான் நீதிமன்றங்களில்; நகர்த்தல் பத்திரங்கள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஆஜரானார். அது அவரது கட்சிக்காரர்களுடன் தொடர்புபட்ட விடயமும் கூட.  

ஆனால், 2011ஆம் ஆண்டு மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையத்தில் நியமன பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சுமந்திரனிடத்தில் ‘லண்டன் பயணம்’ தொடர்பில் நிற்கவைத்து கேள்விகளை தொடுத்தவர் சிவகரன். இவரே தமிழரசுக்குள்ளும், வெளியிலும் ‘சுமந்திரன் எதிர்ப்பு வாதத்தை’ தோற்றுவித்த ‘பிதாமகன்’.

பொதுவெளியில் சுமந்திரனை ‘அரசியல் வழிப்போக்கன்’ என்று பகிரங்கமாக விமர்சித்தவரும் இவரே. பின்னாளில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் வெளியேற்றத்துக்கும் காரணமாக இருந்தவர் சுமந்திரன். 

இவ்வாறு முட்டிமோதிக்கொண்டிருக்கும் ஒருவருக்காக மன்னார் நீதிவான் நீதிமன்றப் படியேறியதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று சிந்திப்பதற்கும் அப்பால் இந்தச் செயற்பாடு முரண் நகையாகவும் உள்ளது.

சுமந்திரன் நீதிமன்றங்களில் ஆஜரானமையின் பின்னணிக்கு ஆயிரம் அர்த்தங்களை கற்பித்தாலும், ஒரேநாளில் இரண்டு மூன்று நீதிமன்றங்களுக்கு ஏறி இறங்கியமை, ஆணித்தனமான வாதங்களை முன்வைத்தமை அவரது தொழில்வாண்மைக்கு அப்பால் சமூகம் சார் பிரதிபலிப்பை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் அவற்றால் பயன்கள் ஏதுமே கிட்டவில்லை. சுமந்திரனும் நீதித்துறை சார்ந்து அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளவில்லை.

அடுத்து, கப்டன் பண்டிதர் நினைவு கூரல் விவகாரம், இலங்கையின் சுதந்திர தினவிழாவிற்கு விமர்சனங்களை பொருட்டாக கொள்ளாது ‘நல்லெண்ண’ அடிப்படையில் பங்கேற்றவர் சுமந்திரன்.  

மறுபக்கம் ஆயுதபோராட்டத்தை நிராகரித்தாலும் அவர், ‘ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்காக போராடியவர்கள் அல்லர். தங்களுடைய உயிர் போனாலும் பரவாயில்லை, தமது மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகப் போராடியவர்கள். அந்த நிலைப்பாட்டைத் துச்சமாகக் கருதக்கூடாது” என்று சுட்டிக்காட்டியுள்ளார் சுமந்திரன்.

அத்துடன் “தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொள்வதற்காகப் போராட்ட களத்துக்குச் சென்றவர்கள் போற்றப்பட வேண்டியவர்களே. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த புனித தியாகிகளின் தியாகங்களில் நான் வாக்குகளுக்கான அரசியல் செய்யவில்லை” என்றும் அழுத்தமாக கூறி வருபவரும் சுமந்திரனே. 

அவர் அவ்வாறு கூறிவந்தாலும், அரசியலில் பிரவேசித்த பின்னர் நடைபெற்ற எந்தவொரு மாவீரர் நாள் நினைவு கூரல்களிலோ அல்லது விடுதலைப் புலிகள் அமைப்பினர் சார்பான நினைவேந்தல்களிலோ பங்;கேற்றிருக்கவில்லை. 

அத்தகையவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கப்டன் பண்டிதரின் இல்லத்திற்கு சென்று அவருடைய திருவுருவப்படத்திற்குச் மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலித்து மாவீரர் வாரத்தினை ஆரம்பித்து வைத்திருந்தார். இல்லங்களில் தினந்தினம் நினைவு கூருபவர்களுக்கு இது புதிய விடயமும் அல்ல.

இருப்பினும் சுமந்திரன் அரசியலுக்கு வந்ததன் பின்னர் ‘கதிர்காமருடன்’ ஒப்பிடுமளவிற்கு ‘அடிகளை’ வாங்கிய போதும் கூட படியிறங்காதவர் திடீரென மாவீரர்களை அஞ்சலிக்கிறார் என்றால் அந்த அளவிற்கு உள ரீதியாக தயாராகி விட்டரா இல்லை அரசியல் ரீதியான அக, புறக் காரணிகள் அவரை உந்தித்தள்ளி விட்டனவா?

சட்டத்தரணிகளின் சாமர்த்தியம்?

கார்த்திகை மாதம் பிறந்தாலே ‘மாவீர்கள் நாள்’ மட்டுமே கனதியான நிகழ்வு. திலீபனின் நினைவேந்தல் விடயத்தில் ஆட்சியாளர்களின் குணாம்ச பிரதிபலிப்பு அனுபவம் நிறையவே இருக்கின்றது. 

அவ்வாறு இருந்தும் மாவீரர்கள் நாள் நினைவு கூரல் விடயத்தில் எவ்விதமான நன்மைகளும் ஏற்படவில்லை.  வடக்கு, கிழக்கில் உள்ள அத்தனை நீதிவான் நீதிமன்றங்களும் மாவீரர்களை நினைவுகூருவதற்கு தடைகளையே விதித்துள்ளன. 

சிரமதானம் செய்தவர்கள் முதல் நினைவேந்தலுக்கு தயாராகும் அனைவரினதும் தகவல்களை கச்சிதமாக திரட்டி ஒவ்வொரு நீதிமன்ற நியாயாதிக்க எல்லைகளுக்குள்ளும் நினைவு கூரலைத் தடுப்பதற்கான நீதிமன்றக் கட்டளையை பொலிஸார் பெறும் வரையில் சட்டத்தரணிகள் விழித்துக் கொள்ளாதிருந்தமை தமிழ்த் தேசிய இனத்தின் துர்ப்பாக்கியமே.

தமிழ்த் தேசியக் பரப்பில் உள்ள கட்சிகளிலும் சரி, அதற்கு வெளியிலும் சரி தடுக்கி விழுந்தால் சட்டத்தரணிகள். இதில் சிரேஷ்டத்துவ தரப்பினர் வேறு இருக்கின்றார்கள். அத்துணைபேர் இருந்தும் நினைவு கூரும் ‘கூட்டு உரிமை’ மறுதலிக்கப்பட்டிருக்கின்றது.  

‘தமிழர்களுக்கு நினைவு கூரும் கூட்டு உரிமை’ இருக்கின்றது என்றால் அது ‘அடிப்படை உரிமை’ என்றால் அதுபற்றி சட்டத்தரணிகள் முன்கூட்டியே ஏன் கலந்தாலோசித்திருக்கவில்லை. சட்டரீதியாக அணுகுமுறைகளைச் செய்வதற்கான தயார்ப்படுத்தல்களை; அவர்கள் ஏன் மேற்கொண்டிருக்கவில்லை. 

யாழ். மேல் நீதிமன்றத்தில் நினைவுகூருவதற்கான தடையை தடுப்பதற்காக நீதிப்பேராணை மனுக்கள் இரண்டு தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் மேல் நீதிமன்றம் ‘மனுக்களை விசாரிப்பதற்கான அதிகாரம் இல்லை’ என்று கை விரித்து விட்டது. அத்துடன் அந்த விடயம் முற்றுப்பெற்றது. 

ஏனென்றால் எந்தவொரு தொழில்வாண்மை சட்டத்தரணிகளும் மேல்நீதிமன்ற அறிவிப்புக்கு அடுத்தபடியான நகர்வுகளை செய்வதற்குரிய திட்டமிடல்களை கொண்டிருக்கவில்லை. ஒருவேளை அடுத்தகட்ட திட்டங்கள் இருந்தாலும் அதற்கான காலம் போதுமானதாக இருந்திருக்கவில்லை.

நபர்களை மையப்படுத்திய தடை உத்தரவுகள் பெறப்பட்டதன் பின்னர் நீதிவான் நீதிமன்றங்களில் நகர்த்தல் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. அதன்போதும் சரி, மேல் நீதிமன்ற நீதிப்பேராணை விடயத்திலும் சரி தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளின் முக்கிய சட்டத்தரணிகளும், ஏனைய தமிழ்த் தேசிய சிந்தனை சார் சட்டத்தரணிகளும் ஒருமித்து ஆஜராகியிருந்தனர்.  

நினைவு கூரலை தடுப்பதற்கு மனுத்தாக்கல் செய்த சக்திகள் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ளவர்களை பிரித்துப்பார்க்கவில்லை. கட்சிகள், கொள்கைகள், தனி நபர்கள் என்று பிரிந்து நின்றாலும் அனைவரையும் ஒருமித்தே அந்த சக்திகள் பார்த்தன. தமது பிரதிவாதிகளாக கருதிய அனைவரையும் ஒன்றிணைத்தே தடை உத்தரவுகளையும் பெற்றிருந்தன. 

சட்டத்தரணிகள் வழக்கு விசாரணைகளில் ஓரணியாவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றால் நினைவுகூரும் விடயத்தில் கட்சி, அரசியல், தனிப்பட்ட கோபதாபங்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு தம் இனம் சார் மக்களுக்கான ‘நினைவு கூரும்’ உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக, ஆகக்குறைந்தது ‘சமூகக் பொறுப்பு’  என்ற வகையறைக்குள் நின்று சிந்தித்திருந்தாலே ‘பொதுத் தளமொன்றுக்கு’ அனைத்து சட்டத்தரணிகளும் வந்திருக்க முடியும். 

அவ்விதமான தளத்தில், சிரேஷ்ட, கனிஷ்ட தரப்பினரின் பங்கேற்புடன் பரந்துபட்ட கலந்துரையாடல்கள், திட்டமிடல்கள் மூலம் ‘நினைவு கூரும் உரித்தை நிரந்தரமாக உறுதியாக்குவதற்கான’ நகர்வுகளைச் செய்திருக்கலாம். ஆகக்குறைந்தது முயற்சியொன்றாவது எடுத்திருக்க முடியும். 

ஆனால் அவ்விதமான எந்த முயற்சிகளோ, சிந்தனைகளோ, கருத்தாடல்களோ, நகர்வுகளோ இடம்பெறவில்லை. எதிர்காலத்தில் நினைவு கூரும் விடயத்திற்கு அப்பால் பொதுமக்கள் சார்ந்து பொதுவான சட்டப்பிரச்சினையொன்று ஏற்பட்டாலும் சட்டத்தரணிகள் மத்தியில் அவ்விதமான கூட்டுச் செயற்பாடொன்று இடம்பெறும் என்பது அண்மித்த தூரத்தில் தெரிவதாகவும் இல்லை. 

தம்மின மக்கள் சார்ந்த பொதுவிடயங்களில் கூட, சட்டத்தரணிகள் பிளவுபட்டு பிரிந்து நிற்கின்றமையானது, அவர்களுக்குள்ளும், தனிநபர் அல்லது குழு சார்ந்த ‘கதாநாயக’ மனோநிலையின் திரட்சியினால் ஏற்பட்ட மருட்சியோ என்றே வினாவெழுப்ப வேண்டிய சூழமைவைத் தோற்றுவித்திருக்கின்றது. 

அதனைவிடவும், நினைவு கூரும் உரிமை எமது மக்களுக்கு உள்ளது என்பதை திடமாக கூறும் சட்டத்துறை நிபுணத்துவத்தையும் அத்துறையில் அதியுயர் பதவியை வகித்தவருமான நிதியரசர் விக்னேஸ்வரன் தமிழினத்தின் பிரதிநிதியாக இருக்கின்றார். 

ஆனால் அவரும், நினைவு கூரல் விடயத்தினை சட்ட ரீதியாக அணுகவில்லை. சராசரி அரசியல்வாதிகள் போன்றே இந்த விடயத்தினை பாராளுமன்றில் குரல் எழுப்பியும், ஊடக அறிக்கையுடனும் முடித்துக்கொண்டமை வருத்தமளிக்கிறது. 

Leave A Reply

Your email address will not be published.