தமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்!

0

கடந்த செவ்வாய்கிழமையன்று ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான சபையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் அதிக வாக்குகள் பெற்று ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக கருதப்பட்டாலும், அந்த தீர்மானத்திற்குள் சொல்லப்பட்டுள்ள பிரிவுகளில் இலங்கை அரசிற்கு சார்பான விடயங்களே முன்னிலையில் உள்ளதாக விமர்சிக்கப்படுகின்றது. இதனால், மேற்படி தீர்மானம் இலங்கைக்கு எதிரானது என்று கூறப்பட்டாலும், அந்த தீர்மானத்தால் எவ்விதமான நற்பலனும் தமிழ் மக்களுக்கு ஏற்படாது என்று அரசியல் விமர்சகர் தெரிவித்து வருகின்றார்கள்.

இது தொடர்பாக கனடாவிலிருந்து கருத்து வெளியிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் திரு நிமால் விநாயகமூர்த்தி ஒரு இடத்தில் குறிப்பிடுகையில் “அண்மையில் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அது இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டது என்று கூறப்பட்டாலும் அவ்வாறு இடம்பெறவில்லை. மாறாக ‘குற்றவாளியே விசாரணைகளை நடத்தலாம் என்ற தமிழர்களின் விருப்புக்கு மாறாகவே அதன் உள்ளடக்கத்தில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்தத் தடவை கொண்டு வரப்பட்ட தீர்மானம் என்பது 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை விடவும் மிகவும் பலவீனமானது. 2015 ஆண்டு நிறைவேறிய ஐ.நா தீர்மானத்தில் கலப்பு பொறிமுறைகளுடன் கூடிய பல நாடுகள் இணைந்த நீதி விசாரணையை கோரியிருந்தது.

ஆனால் இப்போதைய தீர்மானம் என்பது முழுக்கவும் இலங்கையே இந்த போர்க்குற்றத்தை விசாரிக்கலாம் என சொல்கிறது. இதை இந்தியா வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது தமிழ் மக்களுக்கே பாதகமான அதுவும், ஈழத்தமிழர்கள், தமிழக தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்களின் மன எண்ணங்களுக்கு பாதகம் செய்த ஒன்றாகவே நான் பார்க்கின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தீர்மானம் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டு அதிகமான வாக்குகளைப் பெற்றது என்று தெரிவிக்கப்பட்டாலும், இந்த வாக்கெடுப்பால் தமிழ் மக்களின் காயங்களுக்கு மருந்து போடப்படவில்லை என்றும் இதனால் தமிழ் மக்களின் விருப்பு கவனிக்கப்வில்லை என்றும் குறிப்பிட்ப்பட்டுள்ளார்.

இவ்வாறு பலரும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தன்மையை விமர்சித்து வரும் சந்தர்ப்பத்தில், உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவாத் தீர்மானத்திற்கு பூமாலை சூட்டும் வேலையில் இலங்கையில், தமிழ்த தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றதை நாம் செய்திகள் மூலமாக அறிகின்றோம். அத்துடன் அவர்களைப் பார்த்துச் சிரிக்கவும் செய்கின்றோம்.

இவ்வாறு இந்தியாவிற்கு புகழாரம் சூட்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ஸ்ரீதரன், சம்பந்தர் ஆகியோர் தங்கள் பதவிகளிலிருந்து சுகபோகத்தை தக்க வைக்க வேண்டியவர்களாக உள்ளார்கள். அவர்களுக்கு இந்திய அரசாங்கத்தையும் இலங்கை அரசாங்கத்தையும் சந்தோசப்படுத்த வேண்டிய ‘அவசியம்’ உள்ளது.

அந்த மூன்று உறுப்பினர்களும் கடந்த மைத்திரி- ரணில் ஆட்சிக் காலத்தில் பொற்காலத்தை அனுபவித்தவர்கள். தற்போது இந்தியாவிற்கு புகழ்பாடும் ‘தொழிலை’ச் செய்து மகிழும் மக்கள் பிரதிநிதிகளாகவே அவர்கள் உள்ளார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஸ்ரீதரன் எம்.பி பாராளுமன்றத்தில் இலங்கை அரசிற்கு புத்திமதி கூறி இந்தியாவிற்கும் பாராட்டைச் சொல்ல முனைகின்றார். இதற்காக அவருக்கு இந்திய தூதரகத்தின் ‘சன்மானம்’ மெதுவாக வந்து சேரும். இப்படியே பழக்கப்பட்டவர்களாக அவர் உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து வீதிகளிலேயே நிற்கின்றார்கள்.

ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்தியா நடுநிலை வகித்திருந்தாலும் இலங்கையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டுமென்ற செய்தியை தெளிவாக எடுத்துரைத்துள்ளதுடன், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அவரது மற்றுமொரு நோக்கம் தற்போது பதவி எதுவும் இல்லாமல் உள்ள தனது சகாவான ‘மாவை’க்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் முதலமைச்சர் பதவியை வழங்கலாம் என்று நினைகின்றார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தங்கள் இருப்பை தக்கவைத்துக கொள்ள எதைச் செய்ய வேண்டுமோ, அதையே செய்வார்கள். ஆனால் மக்கள் வீதிகளில் ஆண்டுகள் பலவாய் போராட்டம செய்தும் இன்னும் தங்கள் அன்பான உறவுகள் பற்றிய எந்தச் செய்தியும் வராமல் ஏக்கத்துடன் கதறுகின்றார்கள்.

இவர்களுக்கு எமது பாராளுமன்ற உறுப்பினர்களால் பலன் எதுவுமே இல்லை. மக்கள் வேறு. பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு என்று நிலையே அங்கு தொடர்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.