மேற்கிந்தியத் தீவுகளுக்கு பதிலடி கொடுத்தது இலங்கை

0

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 ஆவது இருபதுக்கு – 20 போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலைப்படுத்திக்கொண்டது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரில் விளையாடி வருகின்றது.

இதன் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையில் 2 ஆவது போட்டி மேற்கிந்தியத்தீவுகளின் அன்டிகுவாவில் இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தனுஷ்க குணதிலக 56 ஓட்டங்களையும் பதும் நிஷங்க 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

மேந்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக பந்து வீச்சில் டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில், 20 ஓவர்களில் 160 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் பெரும் சவாலை ஏற்படுத்தினர்.

இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 43 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சிம்மென்ஸ் 21 ஓட்டங்களையும் மெக்கொய் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் மிரட்டிய இலங்கை அணி சார்பில் வனிது ஹசரங்க, லக்ஷன் சந்தகன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் வனிது ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டார்.

3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரை இலங்கை அணி 1-1 என சமப்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.