13.1 ஓவரிலேயே இலங்கை அணியின் கதை முடிந்தது

0

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு : 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை – மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடர் இன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு ஆன்டிகுவாவில் அமைந்துள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியானது முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கைக்கு வழங்கியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இலங்கை அணியின் முதல் விக்கெட்டானது மூன்றாவது ஓவரின் இறுதிப் பந்தில் 20 ஓட்டங்களுக்கு வழ்த்தப்பட்டது.

அதன்படி தனுஷ்க குணதிலக்க நான்கு ஓட்டங்களுடன் கெவின் சின்க்ளேர் பந்துப் பரிமாற்றத்தில் கிரன் பொல்லார்ட்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரையடுத்து களமிறங்கிய பதும் நிசங்கா ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவுடன் தாக்குப் பிடித்தாட இலங்கை அணியானது ஒன்பது ஓவர்கள் நிறைவில் 70 ஓட்டங்களை பெற்றது.

இருந்தபோதும் பத்தாவது ஓவரின் இறுதிப் பந்தில் நிரோஷன் திக்வெல்ல மொத்தமாக 29 பந்துகளை எதிர்கொண்டு 33 ஓட்டங்களுடன் ஹோல்டரின் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆனார்.

அதனால் இலங்கை அணி தனது இரண்டாவது விக்கெட்டை 71 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தது.

அவரின் வெளியேற்றத்தையடுத்து தொடர்ந்து வந்த அணியின் ஏனைய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

பதும் நிசங்கா (39), அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் (5), சந்திமால் (11), திசர பெரேரா (1), வனிந்து ஹசரங்க (12), அசேன் பண்டார (10), சாமர (2).

இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஆடுகளத்தில் அகில தனஞ்சய 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஒபேட் மெக்காய் 2 விக்கெட்டுகளையும், கெவின் சின்க்ளேர், எட்வர்ட்ஸ், ஹோல்டர், பிராவோ மற்றும் ஃபேபியன் ஆலன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

132 என்ற இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 13.1 ஓவரை மாத்திரமே எதிர்கொண்டு வெற்றியிலக்கை கடந்தது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய லென்ட்ல் சிம்மன்ஸ் மற்றும் எவின் லூயிஸ் ஆகியேர் கூட்டாக இணைந்து முதல் மூன்று ஓவர்களில் இலங்கை அணியின் பந்துப் பரிமாற்றங்களை சின்னாபின்னமாக்க ஓட்ட எண்ணிக்கையும் 50 ஓட்டங்களை எட்டியது.

குறிப்பாக முதல் ஓவருக்கு தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை விளாசித் தள்ளினார் லூயிஸ்.

  • முதல் ஓவர் முடிவில் – 19
  • இரண்டாவது ஓவர் முடிவில் – 27
  • மூன்றாவது ஓவர் முடிவில் – 48

இந் நிலையில் நான்காவது ஓவருக்காக அகில தனஞ்சய தனது இரண்டாவது ஓவருக்கான பந்துப் பரிமாற்றத்தை மேற்கொள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணியின் மூன்று விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தது.

அகிலவின் அந்த ஓவரின் முதல் பந்துக்கு ஒரு பவுண்டரியை விளாசித் தள்ளினார் லூயிஸ். எனும் அடுத்த பந்தில் மொத்தமாக அவர் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கலாக 28 ஓட்டங்களுடன் குணதிலக்கவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அதன் பின்னர் களமிறங்கிய கரீபியன் புயல் என அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் எதிர்கொண்ட முதலாவது பந்திலேயே எல்.பி.டபிள்யூ மு‍றையில் டக்கவுட்டுடனும், அவரைப் போன்றே விக்கெட் காப்பாளர் நிகோலஷ் பூரணும் தனது முதல் பந்து வீச்சில் திக்வெல்லவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளும் நான்காவது ஓவருக்கு வீழ்த்தப்பட்டன.

நான்காவது ஓவர் – 4 W W W 1 4

அது மாத்திரமன்றி அணியின் நான்காவது விக்கெட்டும் ஐந்தாவது ஓவரின் இறுதிப் பந்துக்கு பறிபோனது. அதன்படி ஆரம்ப வீரராக களமிறங்கிய லென்ட்ல் சிம்மன்ஸ் 26 ஓட்டங்களுடன் ஹசரங்கவின் பந்து வீச்சல் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் கிரேன் பொல்லார்ட் மற்றும் ஹோல்டர் ஜோடி சேர்ந்து வான வேடிக்கை காட்ட ஆரம்பித்தனர்.

குறிப்பாக பொல்லார்ட், 2007 இருபதுக்கு : 20 உலகக் கிண்ணத் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங்கின் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள் என்ற சாதனையை மீண்டும் அரங்கத்தில் நிகழ்த்தி அசத்திக் காட்டி மெய் சிலிர்க்க வைத்தார்.

அதன்படி ஆறாவது ஓவருக்காக அகில தனஞ்சய பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை பறக்க விட்டார் பொல்லார்ட்.

அதனால் 6 ஓவர்களின் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 98 ஓட்டங்களை குவித்தது.

இறுதியாக 13.1 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு 6 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்று நான்கு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது மேற்கிந்தியத்தீவுகள்.

ஆடுகளத்தில் ஹோல்டர் 29 ஓட்டங்களுடனும், பிராவோ 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக கிரன் பொல்லார்ட் தேர்வானார்.

இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டவாது இருபதுக்கு : 20 போட்டி மார்ச் 05 ஆம் திகதி அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.