இலங்கையின் வெற்றிக்கு 377 ஓட்டங்களை நிர்ணயித்த மே.இ.தீவுகள்

0

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 377 ஓட்டங்களை மேற்கிந்தியத்தீவுகள் அணியானது நிர்ணயித்துள்ளது.

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்குமிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியானது சமனிலையில் நிறைவுபெற, இரண்டாவது போட்டி மார்ச் 29 ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை மேற்கிந்தியத்தீவுகளுக்கு வழங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் முதல் இன்னிங்ஸுக்காக 111.1 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 354 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை தனது முதல் இன்னிங்ஸுக்காக 107 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக லஹிரு திரிமான்ன 55 ஓட்டங்களையும், பதும் நிஷாங்க 51 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கேமர் ரோச் 3 விக்கெட்டுகளையும், அல்சாரி ஜோசப், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஷானன் கேப்ரியல், மேயர்ஸ் மற்றும் பிளக்வூட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸின் முடிவுகளின்படி 96 ஓட்ட முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 72.4 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட் இழப்புக்கு 280 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை டிக்ளே செய்தது.

இதன் காரணமாக இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 377 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 29 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆடுகளத்தில் லஹிரு திரிமான்ன 17 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

இன்று போட்டியின் இறுதி நாள் ஆட்டமாகும்.

Leave A Reply

Your email address will not be published.