சென்னை மற்றும் டெல்லி அணிகள் அபார வெற்றி

0

நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரின் 19 ஆவது லீக் போட்டியில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 69 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. 

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற இந்தப் போட்டியில் சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி, சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

சென்னை அணிசார்பாக, இறுதி நேரத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இவர் கடைசி ஓவரில் மாத்திரம் 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், டு பிளெஸ்ஸிஸ் 50 ஓட்டங்களையும் ருத்துராஜ் கெய்க்வாட் 33 ஓட்டங்களையும் ரெய்னா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பெங்களூர் அணி சார்பாக ஹர்ஷல் பட்டேல் மூன்று விக்கெட்டுகளையும் சாஹல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், 192 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணியின் வீரர்கள் பலர் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இதனால், 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெங்களூர் அணி 69 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதேவேளை சென்னை மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற மற்றொரு போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிட்டல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து 160 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை சமநிலை செய்தது. இதனால் போட்டி சுப்பர் ஓவருக்குள் நுழைந்தது.

இந்நிலையில்  சுப்பர் ஓவரில், முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, 7 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி கெபிடல்ஸ் அணி, இறுதி பந்தில் வெற்றி இலக்கை கடந்தது.

Leave A Reply

Your email address will not be published.