பஞ்சாப்பை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த கொல்கத்தா

0

ஐ.பி.எல். தொடரில் நேற்று பஞ்சாப்பிற்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

14 ஆவது ஐ.பி.எல். தொடரில் 21 ஆவது லீக் ஆட்டம் நேற்று அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஈயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாட பஞ்சாப் அணி ஆடுகளம் நுழைந்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய கே.எல். ராகுல் 19 ஓட்டங்களுடனும், மயங்க் அகர்வால் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேற ஏனைய வீரர்கள் அனைவரும் சொப்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இதனிடையே கிறிஸ் ஜோர்தன் மாத்திரம் சொல்லும் அளவுக்கு 18 பந்துகளில் 30 ஓட்டங்களை பெற்றார். இறுதியாக பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை பெற்றது.

கொல்கத்தா அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி, சிவம் மாயி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

124 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்க‍ை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு நிதிஷ் ரானா டக்வுட்டுன் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரையடுத்து சுப்மன் கில்லும் 9 ஓட்டங்களுடன் மொஹமட் ஷமியின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சுனில் நரேனும் எதுவித ஓட்டமின்றி ரன் அவுட் ஆனார். 

அதனால் கொல்கத்தா அணி மூன்று ஓவர்கள் நிறைவில் 17 ஓட்டங்களை பெற்று மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

எனினும் அதன் பின்னர் 4 ஆவது விக்கெட்டுக்காக ராகுல் திரிபாதியும் அணித் தலைவர் ஈயன் மோர்கனும் ஜோடி சேர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுக்காது ஓட்டங்களை குவிப்பதில் கவனம் செலுத்தினார்.

அதனால் கொல்கத்தா அணி 10 ஓவர்கள் நிறைவில் 76 ஓட்டங்களை பெற்றது. இந் நிலையில் 11 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் திரிபாதி 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரையடுத்து ஆடுகளம் புகுந்த ரஸ்ஸலும் நீண்ட நேரம் தாக்கு பிடிக்காது 10 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். 

இறுதியாக தினேஷ் கார்த்திக் களமிறங்கி ஈயன் மோர்கனுடன் கைகோர்க்க கொல்கத்தா அணி 16.4 ஓவர்களில் வெற்றியிலக்கை கடந்தது. 

ஈயன் மோர்கன் 47 ஓட்டங்களுடனும், தினேஷ் கார்த்திக் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

நடப்பு தொடரில் இது கொல்கத்தா பெற்ற இரண்டாவது வெற்றி என்பதுடன் பஞ்சாப் அணியின் நான்காவது தோல்வியுமாகும்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஈயன் மோர்கன் தெரிவானார்.

Leave A Reply

Your email address will not be published.