என் தெருக்களின் நிறமெங்கே | த. செல்வா

0

எந்தன் இரக்கத்தின் தெருக்களில் யாருமில்லை
அன்றந்த பாலைத் தரு நிழலில் இரவிரவாய் எமைக் காத்த பச்சை மகள்களில்லை

அடர் வனத் தெருக்களில் தம் பசிய இதையத்தை ஒளித்து வைத்து இரவிரவாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது போராளி அணி

எதை வைத்து எப்படி அணி செய்வேன்
அன்றிருந்த என் செவ்வானத்தை.

இடைவிடா புரட்சிப் பாடலைக் குடித்த படி
ஒரு யுகத்தை எழுதும் பூரிப்புடன் புன்னகைக்கும் கண் விசைக்கும் கர்ப்பத்திலுள்ள குழந்தையும் கூட

மயில்களுக்குத் தெரியும் மலர்வின் ஆடல்
குயில்களுக்குத் தெரியும் எழுச்சிப் பாடல்
ஆடு மேய்க்கும் சிறுவன் கூட நல்ல மேய்ப்பனாய் பரணி பாடுவான்

பச்சை நிலங்களிலே தகதகப்பாய் எழுந்து விழும் இதையத்தில்
இச்சை நிறைந்த ஆயிரங் கதைகள் விதையாய் விருட்சமாகும்

நிலவைப் படகாக்கி நீந்தும் ஒரு அதிசயக் கடலாகிக், குளமாகி
என் ஈழ மகள் நாணி நடனமிடுவாள்

இன்றிந்த விடியும் வெளிகளில்
வெற்று மனதின் தவிப்பில் பிதற்றல்கள் கொப்பளிக்கின்றன
அனாதை யுணர்வு ஊற்றெடுக்கின்றன

விடிந்து செவ்வானத் திரை விலக முதல்
நினைவுக் கால்கள் முள்ளி வாய்க்கால் வரை ஓடிச் செல்கிறது

இன்றிருக்கும் கட்டிடங்கள் வாகனங்கள் அதிசய பதவி மயக்கங்களால் அந்தக் கால்களை கட்ட முடியவில்லை

நந்திக் கரையின் மரங்களிலெல்லாம் அந்தப் பச்சை மகள்களின் கீதமிசைப்பதாய் செவியும் எழுந்து செல்கிறது

இந்த நெஞ்சத்தை பிய்த்து ஆறாய் ஓடவிடுகிறேன்
ஓர் நாளில் ஒரு ஆற்றில் ஏதோ வொரு குழந்தை மிதந்து வரக் காண்பேனென்ற நம்பிக்கையில் எந்தன் செயற்கை வாழ்க்கை மனிதர்களுக்குள் என்னைச் செலுத்துகிறேன்
முடியவில்லை என்பதை அடைத்து வைத்தவனாய்

த.செல்வா
நேரம்.10.57
மலை

Leave A Reply

Your email address will not be published.