ஈழத் தமிழர்களுக்காய் என்றும் உடன் நிற்கும் கனடா நாடு

0

தமிழினப்படுகொலை விடயத்தில் உலக அரங்கில் உலக நாடுகளுக்கு முன்னூதாரணமாக கனடா திகழ்ந்து வருகிறது. இதனை முன்னூதாரணமாகக் கொண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இனப்படுகொலை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றி ஈழத் தமிழர்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.

கனடா பாராளுமன்றத்தின் குரல்

“ஈழத் தமிழ் மக்கள் ஒன்றரை லட்சம் பேர் முள்ளிவாய்க்கால் மண்ணில் சிறீலங்கா அரச படைகளால் கொன்றழிக்கப்பட்டனர். வரலாறு முழுவதும் ஈழத் தமிழ் மக்கள் இனவழிப்பு செய்யப்பட்ட நிலையில், முள்ளிவாய்க்காலில் பாரிய அழிவில் இனவழிப்பு சார்ந்த பல்வேறு கொடூர முறைகளில் ஈழ மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். இந்த நிகழ்வும் மே 18 இனவழிப்பு நினைவுநாளும் உலக தமிழ் மக்களிடையே நீதிக்காக பெரும் அதிர்வலைகளை உருவாக்கும் நினைவுக்காலமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், கனேடிய பாராளுமன்றத்தில் ஆண்டு தோறும் மே 18ஆம் நாளை தமிழ் இனப்படுகொலை தினமாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் முதன் முதலில் ஒரு பாராளுமன்ற உயர் ஜனநாயகச் சபையில் ஈழ மக்கள் சந்தித்த இனப்படுகொலை குறித்து இயற்றப்பட்ட இந்த தீர்மானமானது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். இதற்காக ஈழ மக்கள் சார்பில் கனேடிய பாராளுமன்றத்திற்கும் கனேடிய உறவுகளுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.

நீதியின் ஒளிக்கீற்று

கனேடிய ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழத் தமிழரும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் செயற்பட்டும் வருகின்ற ஹரி ஆனந்தசங்கரி அவர்கள், இனப்படுகொலை தினத்தில் கனேடிய பாராளுமன்றத்தில் குறித்த தீர்மானத்தை முன்வைத்திருந்தார். இந்த நிலையில் குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

அதாவது ஆளும் கட்சியான லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேட்டி உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் 338 உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளமை சிறப்பம்சமாகும். இலங்கையில் தமிழின அழிப்புக்கு தமிழருக்கு எதிரான அடடூழியங்களும் வெளி உலகுக்கு உறுதியாக தெரிவிக்கும் கனடா அரசின் பிரேரணை இன அழிப்பில் இருந்து உயிர் தப்பி வாழும் தமிழ் மக்களுக்கு இது ஒரு நீதிக்கான ஒளிக்கீற்றாவும் ஈழத்தவரின் மன உளைச்சல்களுக்கு ஒரு வடிகாலாகவும் இருக்கும் என கனேடிய மண்ணில் இருந்து வரும் நீதிக்கான குரலை அன்போடும் நன்றியோடும் வரவேற்கிறோம்.

கனேடிய பிரதமரின் ஆதரவுக் குரல்

இதற்காக உழைத்த கனேடிய தமிழ் மக்களுக்கும் ,கனேடிய தமிழ் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளுக்கும் பழைமை வாத கட்சி, கியூபெக் புளக் கியூபெக்குவா, புதிய குடியுரிமை கட்சி, பசுமை கட்சி போன்ற கனேடிய கட்சிகளையும் நினைவுகூருகிறோம். நினைவேந்தலை ஏற்றுக்கொள்வதென்பது இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளுகின்ற செயற்பாடு என்ற வகையில் ஈழத் தமிழ் வாழ்வில் இனப்படுகொலைக்கான நீதியை பெறுவதில் இது சிறந்த செயலாகும். அத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களும் இனப்படுகொலை நினைவுநாளில் ஈழ மக்களுக்கான ஆதரவையும் ஆறுதலையும் பகிர்ந்துள்ளதுடன் ஐக்கிய நாடுகள் சபையில் சிறீலங்கா அரசு பொறுப்புக் கூறலை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அழுத்தம் கொடுக்க தொடர்ந்து பாடுபடும் என்பதையும் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமையும் முக்கியமான நிகழ்வாகும்.

அவுஸ்ரேலியாவின் முன்னெடுப்பு

இதேவேளை, அவுஸ்ரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகள் குறித்தும் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டிப்பது குறித்தும் பாராளுமன்றம் ஏற்றுக் கொள்ள வலியுறுத்தி பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியா நாட்டின் ஆறு மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் நியூசவுத் மாநிலத்தில் அந்நாட்டு மக்களின் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்கின்றமையால்  இந்த தீர்மானம் வலிமையானதாக பார்க்கப்படுகிறது.

குறித்த தீர்மானத்தில், முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நாள் பிரகடனம், போரில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் குறித்த கவனம், அவுஸ்ரேலியாவின் பன்மைத்துவத்தில் ஈழத் தமிழர் பங்களிப்பு, அவுஸ்ரேலியா தமிழ் அமைப்புக்களின் ஊடாக மே 18 ஐ நினைவுகூர்தல் முதலிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் இனவழிப்பை ஏற்றுக்கொள்ளச் செய்தலின் முதற்படியாக அவுஸ்ரேலிய மண்ணில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த இவ் முன்னெடுப்பை நாம் வரவேற்கிறோம்.

இந்தியாவின் பொறுப்பு

இவ்வாறு கண்டங்கள் கடந்தும். நாடுகள் கடந்தும் ஈழ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து தீர்மானங்களும் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை அனுஷ்டிக்கும் பிரேரணைகளும் நிறைவேற்றப்படுகின்ற நிலையில் ஈழத் தமிழ் மக்களின் அண்டை நாடாகவும் பத்துக்கோடி தொப்பிள் கொடி உறவுகளைக் கொண்டுள்ள தாய் – சேய் நாடு என்ற வரலாற்று உறவு நாடாகவும் உள்ள இந்தியாவும் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பொறுப்பில் உள்ளது.

ஏற்கனவே தமிழ் நாட்டில் 2013ஆம் ஆண்டில் “ஈழத்தில் நடந்ததது இனப்படுகொலை என்றும் அதற்கு பன்னாட்டு விசாரணை தேவை” என்று  தமிழ்நாட்டு மக்களின் குரலாக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திய ஆளும் அரசு இந்தியப் பாராளுமன்றத்தில் இனப்படுகொலைத் தீர்மானத்தை கொண்டுவர வேண்டிய பொறுப்பில் உள்ளது. இதற்கு அடிப்படையாக இதேவேளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நினைவேந்தல் தீர்மானம் நிறைவேற்றப்படுவது முக்கியமானதாகும். 

கனடா மற்றும் அவுஸ்ரேலிய மாநிலத்தின் தீர்மானங்களை முன்னூதாரணமாகக் கொண்டு, உலகில் இனப்படுகொலைகள், சமூக ஒடுக்குமுறைகள், அநீதிகளை தவிர்த்து அமைதியான உலகத்தை படைக்கும் வகையிலும் அனைத்துலக மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் உலக நாடுகள் அனைத்தும் இதுபோன்ற தீர்மானத்தை எடுப்பதுடன் ஐக்கிநாடுகள் சபையின் பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச் சபை வாயிலாக ஸ்ரீலங்கா அரசு மீது தமிழ் இனப்படுகொலைக்கான விசாரணையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டும் தீர்மானங்களை முன்மொழிந்து ஏகமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நிற்கிறோம்…

Leave A Reply

Your email address will not be published.