சர்வதேச உதவிகள் ஸ்ரீலங்கா இராணுவத்திற்குச் செல்வதை தடுக்க வேண்டுமல்லவா?

0

இலங்கைத் தீவில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உதவிகள் ஸ்ரீலங்கா இராணுவத்திற்கே விநியோகிக்கப்படுகிறது. இதன் வாயிலாக தமிழின அழிப்பும் தொடர்ந்தும் தரடையின்றி முன்னெடுக்கப்படுகின்றது.

பொருளாதாரப் பேரழிவு

“ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவி ஏற்றபோது 2019இல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருந்த நிலையில் தற்போது 30 மில்லியன் டொலர்கள்கூட இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா அரசின் கஜானா காலியாகியுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியில் 14.3 சதவீத பங்குடன் அதிக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவிடம் அதிகமாக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. சீனாவிற்கு இலங்கை செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இது இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனான 45 பில்லியன் அமெரிக்க டொலர்களில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்காகும். சீனாவிற்கு மட்டும் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கடன்பட்டுள்ளது. இதில் 5 பில்லியன் அளவுக்கு நேரடியாக டொலர்களாக பெற்றத் தொகையாகும்.

ஸ்ரீலங்கா அரசைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு மாத்திரம் 4 பில்லியன் டொலர் மதிப்புடைய கடனை திருப்பி செலுத்த வேண்டும். இதில் ஜூலையில் முதிர்ச்சியடையும் 1 பில்லியன் டொலர் சர்வதேச தங்கப்பபத்திர கடன் உள்ளது. ஸ்ரீலங்கா அரசு கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மீண்டும் மீண்டும் கடன் வாங்கி செலவு செய்து வருகிறது. இதன் அடிப்படையில் ஸ்ரீலங்கா தற்போது சுமார் 12 பில்லியன் டொலர் கடனை வாங்கிக் குவித்துள்ளமை பொருளாதார சீரழிவுக்கு அடிப்படையாகும். இன்றைய உலக சூழலில் பொருளாதாரப் பேரழிவுக்கு உள்ளான நாடாக ஸ்ரீலங்கா பெயர் பதித்து வரலாறு படைத்துள்ளது.

ஏன் இந்த நிலை?

ஸ்ரீலங்கா அரசு தனது வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு நிதியை இனப்படுகொலைக்கே ஒதுக்கி வந்துள்ளது. வெளிப்படையான இனவழிப்பு யுத்த காலத்தில் மாத்திரமின்றி தற்போதும் இராணுவத்தரப்பிற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக மூன்றாம் கட்டஈழப்போர்க் காலத்தில் (1995-2002) 1346 மில்லியன் டொலர்களும், சமாதான காலப்பகுதியில் (2002-2005) 1056 மில்லியன் டொலர்களும், நான்காம் கட்ட ஈழப்போரில் (2006-09) 1499 மில்லியன் டொலர்களும் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் போருக்காக தனது இராணுவச் செலவீனங்களாக ஸ்ரீலங்கா செலவிட்டது.

2009 ஆம் ஆண்டு காலத்தின் பின்னரும் தனது இராணுவத்தினையும், விசேட அதிரடிப்படையினையும், காவல்துறையினையும் பெருமளவில் பேணிக் கொண்டு தனது செலவீட்டில் 11 வீதத்தினை பாதுகாப்புக்கு ஓதுக்கி வருகின்மையை இங்கே சுட்டிக்காட்டுகிறோம். இதேவேளை முள்ளிவாய்க்காலுடன் இனப்படுகொலை முடிந்துவிடவில்லை என்பதுடன் முள்ளிவாய்க்காலைக் காட்டிலும் அதற்குப் பிந்தைய காலத்தில் இனவழிப்பு அதிகமாகவே முடுக்கிவிடப்பட்டுள்ளது என்பதையும் அவதானம் கொள்ள வேண்டும். அந்த வகையில் 2009 மற்றும் 2017ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்புகுதியிலும் போர்க்காலத்தினை விட அதிகமாவே 1716 மில்லியன் டொலர்களை ஸ்ரீலங்கா அரசு இராணுவத்துறைக்கு செலவிட்டுள்ளது.

இராணுவ ஆட்சிக்கான முதலீடு

உலக அளவில் தனது இராணுவத்தினை 99 வீதமான படையினரை இயங்கு நிலையில் வைத்திருக்கும் நாடாக ஸ்ரீலங்கா மாறியுள்ளதோடு, ஆண்டுக்கு 170 மில்லியன் டொலர்களை இராணுவத்தின் ஓய்வூதியத்துக்கு செலவிடுகின்றமை மற்றும் போரின் ஓய்வுக்கு பின்னர், பாதுகாப்பு தரப்பினரின் சம்பளத்தினை 45வீதத்தினால் அதிகரித்துள்ளமை என்பன சிங்கள இராணுவத்திற்கு தமிழ் இனப்படுகொலையை ஊக்குவிக்கும் இராணுவ செலவீன அதிகரிப்பாகும். இவை மக்களின் நிதியில் இருந்து தமிழ் மக்களை ஒடுக்கி அழிக்க பயன்படுத்தப்படுகின்றது.

அனைத்துத் துறைகளிலும் இராணுவத்தை முன்னிறுத்தி, வடக்கு கிழக்கு  முழுவதும் இராணுவத்தை நிலைநிறுத்தியுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம், மருத்துவம், கல்வி முதலிய துறைகளில் மாத்திரமின்றி வடக்கு கிழக்கில் வர்த்தகம் மற்றும் உற்பத்தி துறைகளிலும் இராணுவத்தை நுழைத்து பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் இராணுவ அதிகாரியும் தமிழ் இனத்தை அழிக்கும் இராணுவ மனோபாவத்துடன் முழுமையாகச் செயற்படுபவருமான அதிபர் கோத்தபாயவின் அணுகுமுறையினாலுமே ஸ்ரீலங்கா இன்றைய பொருளாதார நெருக்கடியை அனுபவிக்கின்றது.

கழுத்தை நெறிக்கும் கடனும் கையேந்தலும்

ஸ்ரீலங்காவுக்கு தற்போது 51 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் இருக்கிறது. இதில் சுமார் 35 பில்லியன் டொலர்கள் வரை கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளி வைத்திருக்கும் நிலையில் இந்த ஆண்டிலேயே சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்களை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டியும் உள்ளது. தற்போதும் கூட ஸ்ரீலங்காவுக்கு உதவ உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையில் பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்படப்போகின்ற 1.7 மில்லியன் பேருக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்கு 47.2 மில்லியன் டொலர் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபையும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளன. அத்துடன் 5.7 மில்லியன் மக்களுக்கு உயிர்காக்கும் உதவிகள் தேவை என்றும் ஸ்ரீலங்காவில் வலுவாய் இருந்த சுகாதாரத்துறை இப்போது மோசமடைந்துவிட்டதாகவும் ஐ.நா கூறுகிறது.

இன்னும் படிக்கா ஐ.நா

2009 இனப்படுகொலை யுத்த காலத்தில் இருந்து ஸ்ரீலங்கா அரசைப் படிக்கா அல்லது ஸ்ரீலங்கா அரசின் தந்திரங்களை கண்டுகொள்ளாத ஐ.நா தற்போது ஸ்ரீலங்காவுக்கு அனுப்ப முயல்கின்ற உதவியும்கூட தமிழ் இன அழிப்புக்கு இராணுவத்திற்கே பயன்படுத்தப்படும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அத்துடன் இராணுவத்தை சுகாதாரத்துறை மற்றும் பொருளாதாரத்தில் நுழைப்பதனால் ஸ்ரீலங்கா பாரிய அழிவினை எதிர்கொள்ளும் என கடந்த காலத்தில் சுட்டிக்காட்டியதையும் இங்கே நினைவுபடுத்துகிறோம்.

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு நீதியைக் காணமால் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைகளையும் ஈழத் தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி அவர்கள்மீது இனவழிப்பை அதிகப்படுத்தும் என்பதையும் உடனடியானக ஐ.நா சர்வதேச விசாரணை வழியாக இனப்படுகொலைக்கு நீதியை வழங்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.